December 23, 2014

மலேசிய நாவல் செலாஞ்சார் அம்பாட் - களவாடப்படும் தோட்டத்து கனவுகள்.


ஒதுங்கி நில்லுங்க மரக்கட்டையா நீங்க புரியுதா! கோ புண்ணியவான் அவர்களின் செலாஞ்சார் அம்பாட்  நாவல் அப்படிதானே தமிழனைப்பற்றி பேசுகிறது. காட்டை அழித்து நாட்டை வளப்படுத்திய தமிழ் இனம் இன்னும் தன்னை வளப்படுத்தாமலும் நிலைப்படுத்தாமலும்  வாழ்ந்துக்கொண்டிருப்பதை அழகாக எடுத்துரைப்பதை பார்த்தால் இந்த இனம் பாவப்பட்ட இனமா? இல்லை பரிதாபப்படவேண்டிய இனமா என்று புரியவில்லை.

எங்க மாம பேரு ஆரோக்கியசாமி. பேர பதிஞ்சவன் அயோக்கியசாமின்னு எழுதி தொலைச்சுட்டான். அந்த காலத்திலே பிரஜாவுரிமை பெருவதற்கு என்ன பாடுப்பட்டிருக்கிறார்கள் என்று நினைக்கும் போதும் அதன் தொடர் வினைகளில் எழும் சமுதாய பிரச்சனைகளை இந்த சமுதாயம் எப்படி எதிர்க்கொண்டது என்னும் தளத்தில் இருந்து பார்த்தால் ஒரு பாவப்பட்ட ஜென்மங்களை இந்த சமுதாயம் எப்படி கைக்கழுவிவிடுகின்றது என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

யாரை நோக்கி இக்கதை நகர்த்தப்படுகிறது என்றால் தோட்டத்தை நம்பி தன் ஆயுலின் பெரும் பகுதியை கழித்த மக்களின் முட்டாள்தனத்தால் சமுதாய துரோகிகளான சிலரிடம் அகப்பட்டு அடிமையாக வாழ்வைதைதான் சித்தரிக்கிறது.

செவப்பு பாஸ்போட்டுன்னா, ஏமாளிங்கன்னு ஒரு அர்த்தம் இருக்கு போலருக்கு!. உண்மைதானே ஏமாந்தது மட்டும் அல்ல . அதன் பிறகு அவர்கள் ஏய்க்கபட்டு தான் வாழ்ந்திருக்கின்றார்கள். அது இன்றுவரை ஒரு தொடர்க்கதைதானே.

உண்மையில் வந்த நாடுதானே என்ற அக்கரையின்மையே அதற்கு காரணம். நமக்கென்று ஒன்றுப்பட்ட அமைப்பயை ஏற்படுத்தாமல்  சாதி சண்டையில் அங்கும் இங்கும் தனித்த் தீவுக்கூட்டங்களாய் வாழ்ந்தது எதிர்க்காலத்தை நினைத்துக்கூட பார்க்கமால் கள்ளோடும் சம்சுவோடும் வாழ்பவர்கள் எப்படிதான் நன்றாக வாழமுடியும்?

தோட்டம் துண்டாப்பட்ட போது சனங்கள் இப்படித்தானே சிதறி ஆளுக்கொரு திசையாய் வாழ்வதாரத்தை தேடி ஓடினர்கள்.- புண்ணியவான். மலேசிய இந்தியர்களின் அதுவும் தமிழர்களின் வாழ்வு என்பது அவ்வளவு இன்பமானது அல்ல. அது துன்பமும் துயரமும் நிறைந்தது என்பது இங்கு கூலி வேலை செய்தவர்களுக்கு தெரியும். அது ஒரு தொடர்கதை, துன்பக்கதையாகத்தான் தொடர்ந்துக்கொண்டிருக்கிறது இன்றளவும்.

தாயகத்து மண்ணில் இருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் இங்கு வந்ததும் அதே சாதி கொடுமைகளுக்கும் வெள்ளை துரைக்கும் அவர்களின் எடுபிடிகளான கருப்பு துரைகளுக்கும் ஏவல் செய்ய வேண்டிய கட்டாயம். இதில் என்ன கொடுமை என்றால் இங்கும் சாதிக் ஒரு லயன் கொட்டகை வீடுகள். அதிலும் தரம் பிரித்து தமிழர்களை ஆளும் கொள்கையை விட மாட்டார்கள் போலும்.

கொடுமைகளை தாங்க முடியாமல் தப்பித்து செல்லும் ராமையாவை பிடித்து மரத்தில் கட்டி போட்டு அடித்து  இரவு முழுதும் கொசுக்கடியில் விட்டுச் சென்ற அவர்களின் செயலை பல வருடங்களுக்கு முன் ஒரு ஆங்கில நாவலின் மூலத்தின் அடிப்படையின்  தொலைக்காட்சி தொடரில் ஒன்றின் வழி அமெரிக்க கருப்பு அடிமைகள் எப்படி கொடுமைகளை அனுபவித்தனர் என்பதை அந்த தொடரில் காணநேர்ந்தது. இப்படிதான் தமிழர்களும் சொல்லென்னாத கொடுமைகளை அனுபவித்திருப்பார்கள் என்பதை நினைத்தால் மனமே எப்படி உறைந்து போகிறது. அந்த கருப்பின மக்களின் வாழ்வுக்கும் தமிழர்களின் வாழ்வுக்கும் என்ன வித்தியாசம்?

சக்தியற்றவர்களின் வாழ்வும் சிந்திக்க திறன் அற்றவர்களின் வாழ்வும் திக்கற்றுதான் போகும்.

system wrong என்பது இந்த சமுதாயத்திற்கு மிகவும் பொருந்தும். இந்த சமுதாய கூட்டமைப்பு என்பது. ஒரு தோல்வி அடைந்த ஒரு சமுதாய கட்டமைப்பு. பலவீனமான ஒரு சமுதாயத்தைதான் இது வரை நம்மால் வெளிக்கொணர்ந்திருக்க முடிந்திருக்கின்றன.. சமுதாய ஒழுக்கமும் சரி தனிமனித ஒழுக்கமும் சரி இந்த சமுதாயத்தில் தேடி   எடுக்கவேண்டிய விடயமாக இருக்கிறது. சொல்லும் கருத்துக்களுக்கும் செயலுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது. சாதி மத பேதங்களில் தனி மனித தன்முனைப்பு சாகடிக்கபட்டிருக்கிறது. சமுதாய அமைப்பில் இருந்து, பொருளாதார, ஆன்மீக அடிப்படைகள் கூட வேறாறுக்க பட்டிருக்கிறது.

தன் ஜனங்களின் “ பொட்டை  “ தனங்களில் உருவாகும் வாய் பேசா மடந்தைகலின் கையாலதத் தனத்தால் ஒரு துப்புக்கெட்ட சமுதாயத்தைதான் உருவாக்க முடிந்திருக்கின்றன என்பதைதான் இந்த நாவல் நமக்கு சுட்டுகின்றன.

நாம் நமது சிந்தனைகளை இன்னும் ஆழமாகவும் அறிவுப்பூர்வமாகவும் அதே சமயத்தில் புதிய அணுகுமுறைகளை நோக்கி நகர்ந்தவேண்டிய காலக்கட்டம்.

சமுகத்தின் ஒரு பிரிவான தொழில் வர்கம் அனுபவித்த கொடுரங்களை சில துளிகளைத்தான் இன்நாட்டின் பிரபல எழுத்தாளருமான கோ புண்ணியவான் சித்திரமாக நமக்கு காட்சிப்படுத்தியுள்ளார். ஆனால் இது ஒட்டுமொத்த தொழிளாளர்களின் அவலம் இல்லை என்றாலும் அதுவும் வெள்ளைக்கார துரைகளிடம் நம் பெற்ற அவலங்களை கோ புண்ணியவான் சொல்லவில்லை என்றாலும் அவர்களை விட சீன தவுக்கேயின் அடிவருடிகளான நம் இன பேய்களிடம் நம் மக்கள் பெற்ற துன்பங்களை உண்மைச்சம்பவமாக சொல்லி இருகின்றார். ஆனாலும் துன்பத்திற்கு ஒரு அளவுக்கோலை சொல்லமுடியாது என்பதால் எந்த முதலாளிகளிடமும் நம் இனம் அடிமையாகத்தான் வாழ்ந்திருக்கின்றன. அது வெள்ளை இனமாக இருந்தாலும் சரி, மஞ்சள் தோலாக இருந்தாலும் சரி இல்லை சப்பான் காரனக இருந்தாலும் சரி. அடிமையாக வாழ்பவன் என்று அடிமைதான் போலும். அதிலிருந்து மீண்டு வருவதற்குள் ஆயுள் முடிந்துவிடுகின்றன.

இன்னும் எவ்வளவோ சொல்லவேண்டிய நாவல். சட்டென்று முடிவதுதான் வேதனை. மலேசிய தமிழர்களின் தோட்டபுரத்து வாழ்வை சொல்ல வந்த கோ புண்ணியவானிடம் தோட்டத்து தமிழ் நடை தத்துருபமாக உள்வாங்கி இருப்பது ஒரு அதிசயம்தான்.

ஒரு நாவலுக்குரிய இலக்கணம்தான் என்ன? எதை இலக்காக கொண்டு அந்த நாவல் உரு பெற்று கரு கொள்கிறது என்று பார்த்தால் உணர்ச்சி எந்த அளவுக்கு உள்வாங்கியிருகின்றது என்பது முக்கியமாக படுகிறது. எதுவானலும் உணர்ச்சி பொங்கி வழியும் உண்மைச் சம்பவத்தை அழகிய கற்பனையோடு உயிர் கொடுத்திருப்பதை பார்த்தால் ஒரு யதார்ந்தமான கதை காலத்தை வென்று நிற்கும் என்பது புலனாகிறது.