July 1, 2014

ஈரோடு தமிழன்பன் -கிழக்குச் சாரளம் 2005

நான் படித்த நூல்களின் சாரம்.

1. ஈரோடு தமிழன்பன் -கிழக்குச் சாரளம் 2005

கடைந்தெடுப்பது எல்லாம் கற்பனை என்றாலும் கவிதை சிலருக்குதான் காமதேனாக சுரந்து கற்பக விரிச்சமாக வேர்ப் பதித்திருப்பதில் வியப்பு ஒன்றுமில்லை.

சாதரணமாக நான் நடைப் பயிலும் கிள்ளான் துங்கு கிள்ளானவில் அமைந்துள்ள ஒரு புத்தகக்கடையில் என் கண்ணில் பட்ட ஒரு புதுக் கவிதை புத்தகத்தை கையில் எடுத்தேன். ஈரோடு தமிழன்பன் கவிதை தொகுப்பு அது. எனக்கு அறிமுகமில்லாத ஒரு கவிஞர். கவிதையை நோட்டமிட்டேன் புது கவிதையின் வரிகள் சாதரண இயல்பு நிலைக் கவிதைகளை கொண்டிருந்தது. வாங்கிய கவிதைகளை படித்த பிறகு எனது நூல் நிலைய அடுக்குகளில் வைத்து விட்டேன்.

சில காலம் சென்றபின் சை பீர்முகம்மதுவின் திசைகள் நோக்கிய பயணம் என்ற நூலை படித்துக்கொண்டிருந்த போது ஈரோடு தமிழன்பனை பற்றி குறிப்புகளை பார்த்த பின்புதான் முன்பு என் கரங்களில் தவழ்த்த புத்தகம் ஒரு மாபெரும் மனிதனின் சிந்தனையின் ஒரு துளி என்பதை அறிந்தேன். அவர் பன்முக ஆளுமை கொண்ட கலைஞர் என்பதை உணர்ந்தேன்.

கவிஞர் ஈரோடு தமிழன்பன் பரிந்துரை தேவைப்படாத பாட்டு பறவை. மனிதர்களுக்குதான் எத்தனை எத்தனை முகம்.கவிஞனாய் கலைஞனாய், எழுத்தை ஆள்பவனாய்.,ஓவியனாய், மரபுக் கவிஞராய், கவியரங்கக் கவிஞராய், புதுக்கவிதைக் கவிஞராய், சிறுகதை ஆசிரியராய், புதின ஆசிரியராய், நாடக ஆசிரியராக , சிறார் இலக்கியப் படைப்பாளியாக, வாழ்க்கை வரலாற்றாசிரியராக, திறனாய்வாளராய், கட்டுரையாளராய், சொற்பொழிவாளராய், திரைப்பட இயக்குநர், திரைப்பட பாடலாசிரியராக, என பன்முகப்பட்ட ஆளுமைகளைக் கொண்டிருப்பவர். ,அப்பப்பா எண்ணற்ற முகத்தில் ஒரு கவித்துவமான எண்ணச்சாரலின் சாயலில் கவிதை முகத்தை அல்லவா போர்த்திக் கொண்டிருகின்றார்.

கரந்தை தமிழ்ச்சங்கத்தின் மாணவர். அவரின் இயற்பெயர் ஜெகதீசன். பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள் என்ற நூல் அவரின் ஆகச் சிந்தனை. ஒரு மாமலையோடு பத்து ஆண்டுகள் என்பது அவரின் எழுத்தை புடம் போட்ட தங்கமாக அவரின் எழுத்து ஆளுமையை வெளிக்கொண்டிருக்கும் என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது.

கவிதையின் முதல் அர்த்தம் முற்றிலும் அர்த்தம் அது கவிதையாக இருப்பதுதான் என்கிறார். நிலவுக்கு அது வெளிச்சமாக இருப்பது அர்த்தம். நெருப்புக்கு வெப்பமாக இருப்பதைவிட வேறு என்ன தனியான அர்த்தம் இருக்க முடியும் என்று வினா எழுப்புகின்றார்.

கவிதை கவிதையாகாமல் அர்த்தமாகிவிடுவதை ஒருபோதும் உண்மை கவிஞன் ஒப்புக்கொள்ளமாட்டான். அர்த்தங்களே கவிதையாக வேண்டும் என்கிறார் தமிழன்பன்
கவிதை தன் கவிதையாவதற்கு வார்த்தைகளை காட்டிலும், அர்த்தங்களைக் காட்டிலும் அது வாழ்க்கையையே நம்பி இருகின்றது.

வாழ்க்கையின் அர்த்தம் அனுபவங்களை தெரிந்தும் தெரியாமலும் புரிந்தும் புரியாமலும் சிதறிக்கிடக்கிறது .திரட்டி சேர்க்க முற்படும் பொழுது கவிதையும் சிதறிவிடுகிறது.
- “பச்சை ஆன்மாவுக்குள் படபடக்கும் என் சிறகுகள்
கவிதை முகம் காணாமல் காத்துக் கிடக்கிறது சொற்கள்.”.

நெருப்பென்று சொன்னால்.. என்ற .தலைப்பில்
“நெருப்பைக்
கவிதையில் மூட்டிவிட்டுப்
படுத்தேன் நேற்றிரவு
விடியலில்
சாம்பலில் நான்”

எது அழகு?
என்னும் கவிதையில்
“தண்ணீர் முடிச்சுக்களை
அவிழ்த்துக் கொண்டு
கரைக்கு வரும் அழகு
முற்றுப்புள்ளிகளாய்
உதிர்ந்து கிடக்கும் மணல்கள் ”
இன்னும்………….
“அழகு அழகின் முன் அழிகிறது
அழியும் அழகா உண்மை அழகு ?” – புது கவிதையில் எது அழகு என்று கூற வருகின்றார்..

பாரதிதாசனின் பாசறையில் பயணித்தவரின் கவிதைகள் புதுக் கவிதையாய் புறப்பட்டிருப்பது ஒரு மாறுப்பட்ட சிந்தனை களம். அது ஒரு மரபுக்கவிதையில் இருந்து மாற்று உருக்கொண்டு புது கிளைகளை பரப்பியிருப்பது நமது உள்ளம் கிழக்கு சாளரத்தின் வழி புது உதயத்தை தொட்டிருப்பதுதான். ஆனால் கிழக்கு சாளரத்தின் மொழி நடை இயல்பு மொழியில் அமைந்திருப்பது ஏனோ ஈரோடு தமிழன்பனின் மரபுக் கவிதை வளம் இன்னும் எம்கரங்களின் வந்துச் சேரவில்லை என்றே தோன்றுகின்றது.. இன்னும் அவரின் பல கவிதைகளை தேடி எடுத்து முத்துக் குளிக்க முயற்சிகின்றேன்.

பாரதிதாசனின் பல படிகளை கடந்து வந்தவரின்

“ திக்குகளின் புதல்வர்கள்
தேசவரம் பற்றவர்கள் “

என்று அவர் கூறும் பொழுது அவரின் பழைய குறுகிய எல்லைகள் கைவிடப்பட்டமை நமக்கு புலனாகிறது.. கவிஞர் மு. மேத்தா சொல்வது போல் ஆரவாரமற்ற சொற்கள் அழகிய கவிதயாகின்றன.

குறிப்பு..இங்கு நான் படித்த புத்தகத்தின் சாரத்தையும் அதன் அழகிய சிந்தனைகளை மட்டும் முன் வைக்கின்றேன்.

-
Post a Comment