March 21, 2014

உலகப்புகழ் பெற்ற உமார்கய்யாம் பாடல்கள்


உலகப்புகழ் பெற்ற உமார்கய்யாம் பாடல்கள்

உலகில் உள்ள தலைச்சிறந்த கவிதைகளை தமிழில் மொழிபெயர்ப்பது என்பது சுலபமான விஷயம் அல்ல. 800 வருடங்களுக்கு முன் பிறப்பெடுத்த ஒரு கவிதையை, அதுவும் கரு சிதைவுப்படாமல் எழுதுவதற்கு கவித் திறனும் தமிழில் ஆளுமையும் ஒருங்கே  பெற்ற சிலரால் அந்த கவிதையை அற்புத் நடையில் மாற்றுக் குறையாமல் ஒரு அசல் தமிழ் கவிதையாகவே நமக்கு தரமுடியும்.

உமர் பாரசீகத்தில் ஆப்கானிஸ்தானை ஒட்டிய குராசான் பகுதியில் பிறந்தவர். 1048- லிருந்து 1131 வரை வாழ்ந்தவர். நமக்குத் தெரிந்த கஜினியின் காலம். பல படையெடுப்புகள் ஆக்கிரமிப்புகளிடையே வாழ்ந்தவர். எது எப்படியானால் என்ன மதுவும் மாதுவும் கவிதையும் தான் மகிழ்ச்சி தருவன மற்றவற்றைப் பற்றிக் கவலையில்லை என்ற ஒருவாறான களியாட்டத்தில் வாழ்க்கையைக் கடத்த விரும்பியவர் என்பதல்லாது ஒரு பரந்த உலகப்பார்வையும் வாழ்க்கை நோக்கும் கொண்டவர், அவர் காலத்தில் ஆட்சி செய்திருக்கக் கூடிய மதக் கட்டுப்பாடுகளை, நம்பிக்கைகளை கேலியுடன் மீறி வாழ்ந்தவர், ஒரு சூஃபி போல என்று தெரிகிறது. இஸ்லாம் மிகுந்த வீரியத்துடன் பரவி வந்த காலத்தில், படையெடுப்புகளின் மத்தியில் வாழும் நிச்சயமின்மையையும் ஆபத்துக்களையும் மீறி தனக்கென ஒரு வாழ்நெறியைக் கொண்டு அதை ருபாய்யத்துக்களாக வெளிப்படுத்தியதும் பெரிய விஷயங்கள் தான். அவர் காலத்தில் அவர் பலரது எதிர்ப்பையும் எதிர்கொண்டு தான் வாழ்ந்தார் என்பதும், ருபாய்யத் அவ்வளவும் உமருடையது அல்ல என்று சொல்லப்படுவதும் புதிய செய்திகள்.

உலக புகழ்ப் பெற்ற உன்னத கவிஞர் உமார்கய்யாம். அவருடைய “ருபாயத்” பாரசீக கவிதையில், இது ஒரு புது மாதிரி. இந்த உலகத்தையே அவருடைய சொர்க்கமாக நினைத்து அதிலே உருகி எழுந்த கவிதைகள். உமார்கய்யாமை ஒரு நாஸ்திகவாதி என்கிறார்கள். அவருக்கு விதியில் நம்பிக்கையுண்டு. உமார் மது மாதுவை கருப்பொருளாக பாடியதற்கு உட்பொருள் உண்டு என்கின்றனர். அவர் ஒரு வேதாந்தி.

இன்னொமொரு ருபாய்யத், சாதாரண மக்கள் கேட்பது.\

மதத்தின் நீதிமான்களே, உங்களைவிட நன்றாக
உழைக்கிறோம் நாங்கள்,
இவ்வளவு குடிபோதையிலும் மிகவும் நிதானமானவர்கள்
நாங்கள்,
நீங்கள் குடிப்பது மனித இரத்தத்தை, நாங்கள் குடிப்பது
திராட்சையின் ரத்தத்தை,
உண்மையாகச் சொல்லுங்கள் - நம்மில் யார் அதிக
ரத்த வெறி பிடித்தவர்கள்?

இன்று அதே பாரசீகத்தில் உமர் இன்றைய அயொத்தொல்லாக்கள் கையில் என்ன பாடு பட்டிருப்பார்? உயிரோடு இருந்திருப்பாரா? ருபாய்யத்துகள் நமக்குக் கிடைத்திருக்குமா?

உமர் கய்யாம் ஒரு வித்தியாசமான முஸ்லீம். வித்தியாசமான கவிஞர். அவர் தன்னைப் பற்றிச் சொல்லிக்கொள்ளும் ருயாய்யத் ஒன்று உண்டு.

விலக்கப்பட்ட மதுவருந்தி போதை கொண்டேனா,
ஆம், அப்படித்தான்!
நான் அசுவிசுவாசியா, புறவினத்தானா அல்லது
உருவ வழிபாட்டானா, ஆம் அப்படித்தான்!
மதத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் சந்தேகமுண்டு,
என்னைப் பற்றி;
நானோ, நானாக மட்டுமே இருக்கிறேன்.

அவர் வாழ்ந்தது பார்சிகளைத் துரத்திக்கொண்டிருந்த இஸ்லாமாகிக் கொண்டிருந்த பாரசீகத்தில்.. இருப்பினும் அங்கு ஒரு உமர் பிறந்தார். ருபாய்யத்துகளை எழுதி அவர் வாழ முடிந்திருக்கிறது. அன்னிய படையெடுப்புக்களுக்கும் ஆக்கிரமிப்புக்களுக்கும், மாறும் மத நம்பிக்கைகளுக்கும் இரையாகிக் கொண்டிருந்த பாரசீகம் அது.

கடவுள், ரோஜா மலர்கள், திராசை ரசம், அந்த  ரசம் ததும்பி வழியும் பாத்திரம், அதை ஊற்றும் ஜீவனுள்ள பெண்,இவற்றுக்குள் அவருடைய வேதாந்தம் எங்கும் பரவியிருக்கிறது. மதுவை பற்றி அவர் பாடியிப்பதற்கு மேல் யாரும் பாடியிருக்க முடியுமா என்பதே சந்தேகம் தான்.

உமார் கய்யாமின் ருபாயத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த எட்வர்ட் பிட்ஜெரால்ட் என்பவரை சொல்லித்தான் ஆகவேண்டும்.  இவர் 1859ம் ஆண்டு “ருபாயத்தை மொழிப்பெயர்த்தார். அவருடைய ஆங்கில ருபாயத் பெற்ற எல்லையற்ற புகழுக்குப் பின்னால், ராஸெட்டி,ஸ்வின்பன் முதலிய ஆங்கில கவிகள் அதை கண்டெடுத்துப் பாராட்டிய பிறகு அது உலகப் புகழ் பெற்றது. பிட்ஜெரால்ட் மொழிபெயர்ப்பு மொழியின்ப மெருகு பெற்றது.

தமிழிலே உமார் கய்யாமின் கவிதைகளை வேறு எவராயினும் மொழிபெயர்த்திருக்கின்றார்கள என்று தெரியவில்லை. ஆனாலும் இருபெரும் கவிஞர்கள் கவிமணி சி. தேசிக விநாயகம் பிள்ளையும் ச.து சு.யோகியார் அவர்களின் மொழிபெயர்ப்பில் வழி கவிமணி தேசிக விநாயகம் நடையில் பழுத்த கனிந்த உள்ளம் ஆனந்தமாக அமைதியாக உலா வருகிறது. யோகியரின் நடையில் இளமையின் விறுவிறுப்புடன் நடைப்பயில்கிறது. அதே போன்று தங்க ஜெயராமன் - ஆசை மொழிபெர்ப்பும் நவீன நடையில் வீராப்புடன் நடைப் பயில்கின்றது.
Here with a loaf of bread beneath the bough
A flask of wine, a book of verse and thou
Beside me singing in the wilderness
Wilderness is paradise enow.
ஜாடி மதுவும் கவிதை நூலும்
ரொட்டித் துண்டும் வேண்டும் எனக்கு,
பிறகு நீயும் நானும் யாருமற்ற இடத்தில்
சுல்தானின் ராஜ்யத்தை விட அதிக செல்வம் நமதாகும்.
பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களை எட்வர்ட் பிட்ஸ் ஜெரால்டு ஆங்கிலத்தில் ஆக்கியுள்ளார். கவிமணி ஆங்கில நூலைத் தழுவித் தம் நூலைப் படைத்துள்ளார். இப்பாடலின் தழுவலாக கவிமணி எழுதிய கீழ்க்கண்ட பாடல் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றது.

வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வகீதம் பலவுண்டு
தெரிந்து பாட நீயுண்டு
வையந் தருமிவ் வனமன்றி
வாழும் சொர்க்கம் வேறுண்டோ!

ருபாயத்துக்கள் முதன் முறையாக தமிழில் நமக்குப் படிக்கக் கிடைத்துள்ளன. படித்ததும் மனதில் எழும் காட்சிகளே ஒரு சௌந்தர்ய உணர்வைத்தைத் தருகின்றன. மூல பாரசீகமொழியில் இவற்றின் சப்த ரூபம் எவ்வளவு இனிமையைத் தரும் என்று கற்பனை செல்கிறது. அதுவே மனதுக்கும் இனிமை தருகிறது.

மேலும் சில உமார் கய்யாமின் கவிதை துளிகள் தமிழ் மொழிபெயர்பில்

கடவுள் ஒளி, நாம் கடவுளின் நிழல் 
ஒளியே நிழலாம் உண்மை அறிந்தேன்

அன்பின் விளக்கம்;  அதனை இதயக்
குகையில் ஏற்றுவாய்; குலவிய தழலில்
இன்பம் துன்பம் யாவும் எரிகவே.

மேற்குறிப்பு - உமார்கய்யாம் பாடல்கள்
கவிமணி சி. தேசிக விநாயகம் பிள்ளை                                    ச.து சுப்பிரமணிய யோகியார்

 -ஓமர் கய்யாம் ருபாய்யத்: (தமிழில்: தங்க ஜெயராமன்ஆசை)
க்ரியா வெளியீடு

உமர் கய்யாமின் ருபாய்யத்
June 19, 2012