December 23, 2014

மலேசிய நாவல் செலாஞ்சார் அம்பாட் - களவாடப்படும் தோட்டத்து கனவுகள்.


ஒதுங்கி நில்லுங்க மரக்கட்டையா நீங்க புரியுதா! கோ புண்ணியவான் அவர்களின் செலாஞ்சார் அம்பாட்  நாவல் அப்படிதானே தமிழனைப்பற்றி பேசுகிறது. காட்டை அழித்து நாட்டை வளப்படுத்திய தமிழ் இனம் இன்னும் தன்னை வளப்படுத்தாமலும் நிலைப்படுத்தாமலும்  வாழ்ந்துக்கொண்டிருப்பதை அழகாக எடுத்துரைப்பதை பார்த்தால் இந்த இனம் பாவப்பட்ட இனமா? இல்லை பரிதாபப்படவேண்டிய இனமா என்று புரியவில்லை.

எங்க மாம பேரு ஆரோக்கியசாமி. பேர பதிஞ்சவன் அயோக்கியசாமின்னு எழுதி தொலைச்சுட்டான். அந்த காலத்திலே பிரஜாவுரிமை பெருவதற்கு என்ன பாடுப்பட்டிருக்கிறார்கள் என்று நினைக்கும் போதும் அதன் தொடர் வினைகளில் எழும் சமுதாய பிரச்சனைகளை இந்த சமுதாயம் எப்படி எதிர்க்கொண்டது என்னும் தளத்தில் இருந்து பார்த்தால் ஒரு பாவப்பட்ட ஜென்மங்களை இந்த சமுதாயம் எப்படி கைக்கழுவிவிடுகின்றது என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

யாரை நோக்கி இக்கதை நகர்த்தப்படுகிறது என்றால் தோட்டத்தை நம்பி தன் ஆயுலின் பெரும் பகுதியை கழித்த மக்களின் முட்டாள்தனத்தால் சமுதாய துரோகிகளான சிலரிடம் அகப்பட்டு அடிமையாக வாழ்வைதைதான் சித்தரிக்கிறது.

செவப்பு பாஸ்போட்டுன்னா, ஏமாளிங்கன்னு ஒரு அர்த்தம் இருக்கு போலருக்கு!. உண்மைதானே ஏமாந்தது மட்டும் அல்ல . அதன் பிறகு அவர்கள் ஏய்க்கபட்டு தான் வாழ்ந்திருக்கின்றார்கள். அது இன்றுவரை ஒரு தொடர்க்கதைதானே.

உண்மையில் வந்த நாடுதானே என்ற அக்கரையின்மையே அதற்கு காரணம். நமக்கென்று ஒன்றுப்பட்ட அமைப்பயை ஏற்படுத்தாமல்  சாதி சண்டையில் அங்கும் இங்கும் தனித்த் தீவுக்கூட்டங்களாய் வாழ்ந்தது எதிர்க்காலத்தை நினைத்துக்கூட பார்க்கமால் கள்ளோடும் சம்சுவோடும் வாழ்பவர்கள் எப்படிதான் நன்றாக வாழமுடியும்?

தோட்டம் துண்டாப்பட்ட போது சனங்கள் இப்படித்தானே சிதறி ஆளுக்கொரு திசையாய் வாழ்வதாரத்தை தேடி ஓடினர்கள்.- புண்ணியவான். மலேசிய இந்தியர்களின் அதுவும் தமிழர்களின் வாழ்வு என்பது அவ்வளவு இன்பமானது அல்ல. அது துன்பமும் துயரமும் நிறைந்தது என்பது இங்கு கூலி வேலை செய்தவர்களுக்கு தெரியும். அது ஒரு தொடர்கதை, துன்பக்கதையாகத்தான் தொடர்ந்துக்கொண்டிருக்கிறது இன்றளவும்.

தாயகத்து மண்ணில் இருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் இங்கு வந்ததும் அதே சாதி கொடுமைகளுக்கும் வெள்ளை துரைக்கும் அவர்களின் எடுபிடிகளான கருப்பு துரைகளுக்கும் ஏவல் செய்ய வேண்டிய கட்டாயம். இதில் என்ன கொடுமை என்றால் இங்கும் சாதிக் ஒரு லயன் கொட்டகை வீடுகள். அதிலும் தரம் பிரித்து தமிழர்களை ஆளும் கொள்கையை விட மாட்டார்கள் போலும்.

கொடுமைகளை தாங்க முடியாமல் தப்பித்து செல்லும் ராமையாவை பிடித்து மரத்தில் கட்டி போட்டு அடித்து  இரவு முழுதும் கொசுக்கடியில் விட்டுச் சென்ற அவர்களின் செயலை பல வருடங்களுக்கு முன் ஒரு ஆங்கில நாவலின் மூலத்தின் அடிப்படையின்  தொலைக்காட்சி தொடரில் ஒன்றின் வழி அமெரிக்க கருப்பு அடிமைகள் எப்படி கொடுமைகளை அனுபவித்தனர் என்பதை அந்த தொடரில் காணநேர்ந்தது. இப்படிதான் தமிழர்களும் சொல்லென்னாத கொடுமைகளை அனுபவித்திருப்பார்கள் என்பதை நினைத்தால் மனமே எப்படி உறைந்து போகிறது. அந்த கருப்பின மக்களின் வாழ்வுக்கும் தமிழர்களின் வாழ்வுக்கும் என்ன வித்தியாசம்?

சக்தியற்றவர்களின் வாழ்வும் சிந்திக்க திறன் அற்றவர்களின் வாழ்வும் திக்கற்றுதான் போகும்.

system wrong என்பது இந்த சமுதாயத்திற்கு மிகவும் பொருந்தும். இந்த சமுதாய கூட்டமைப்பு என்பது. ஒரு தோல்வி அடைந்த ஒரு சமுதாய கட்டமைப்பு. பலவீனமான ஒரு சமுதாயத்தைதான் இது வரை நம்மால் வெளிக்கொணர்ந்திருக்க முடிந்திருக்கின்றன.. சமுதாய ஒழுக்கமும் சரி தனிமனித ஒழுக்கமும் சரி இந்த சமுதாயத்தில் தேடி   எடுக்கவேண்டிய விடயமாக இருக்கிறது. சொல்லும் கருத்துக்களுக்கும் செயலுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது. சாதி மத பேதங்களில் தனி மனித தன்முனைப்பு சாகடிக்கபட்டிருக்கிறது. சமுதாய அமைப்பில் இருந்து, பொருளாதார, ஆன்மீக அடிப்படைகள் கூட வேறாறுக்க பட்டிருக்கிறது.

தன் ஜனங்களின் “ பொட்டை  “ தனங்களில் உருவாகும் வாய் பேசா மடந்தைகலின் கையாலதத் தனத்தால் ஒரு துப்புக்கெட்ட சமுதாயத்தைதான் உருவாக்க முடிந்திருக்கின்றன என்பதைதான் இந்த நாவல் நமக்கு சுட்டுகின்றன.

நாம் நமது சிந்தனைகளை இன்னும் ஆழமாகவும் அறிவுப்பூர்வமாகவும் அதே சமயத்தில் புதிய அணுகுமுறைகளை நோக்கி நகர்ந்தவேண்டிய காலக்கட்டம்.

சமுகத்தின் ஒரு பிரிவான தொழில் வர்கம் அனுபவித்த கொடுரங்களை சில துளிகளைத்தான் இன்நாட்டின் பிரபல எழுத்தாளருமான கோ புண்ணியவான் சித்திரமாக நமக்கு காட்சிப்படுத்தியுள்ளார். ஆனால் இது ஒட்டுமொத்த தொழிளாளர்களின் அவலம் இல்லை என்றாலும் அதுவும் வெள்ளைக்கார துரைகளிடம் நம் பெற்ற அவலங்களை கோ புண்ணியவான் சொல்லவில்லை என்றாலும் அவர்களை விட சீன தவுக்கேயின் அடிவருடிகளான நம் இன பேய்களிடம் நம் மக்கள் பெற்ற துன்பங்களை உண்மைச்சம்பவமாக சொல்லி இருகின்றார். ஆனாலும் துன்பத்திற்கு ஒரு அளவுக்கோலை சொல்லமுடியாது என்பதால் எந்த முதலாளிகளிடமும் நம் இனம் அடிமையாகத்தான் வாழ்ந்திருக்கின்றன. அது வெள்ளை இனமாக இருந்தாலும் சரி, மஞ்சள் தோலாக இருந்தாலும் சரி இல்லை சப்பான் காரனக இருந்தாலும் சரி. அடிமையாக வாழ்பவன் என்று அடிமைதான் போலும். அதிலிருந்து மீண்டு வருவதற்குள் ஆயுள் முடிந்துவிடுகின்றன.

இன்னும் எவ்வளவோ சொல்லவேண்டிய நாவல். சட்டென்று முடிவதுதான் வேதனை. மலேசிய தமிழர்களின் தோட்டபுரத்து வாழ்வை சொல்ல வந்த கோ புண்ணியவானிடம் தோட்டத்து தமிழ் நடை தத்துருபமாக உள்வாங்கி இருப்பது ஒரு அதிசயம்தான்.

ஒரு நாவலுக்குரிய இலக்கணம்தான் என்ன? எதை இலக்காக கொண்டு அந்த நாவல் உரு பெற்று கரு கொள்கிறது என்று பார்த்தால் உணர்ச்சி எந்த அளவுக்கு உள்வாங்கியிருகின்றது என்பது முக்கியமாக படுகிறது. எதுவானலும் உணர்ச்சி பொங்கி வழியும் உண்மைச் சம்பவத்தை அழகிய கற்பனையோடு உயிர் கொடுத்திருப்பதை பார்த்தால் ஒரு யதார்ந்தமான கதை காலத்தை வென்று நிற்கும் என்பது புலனாகிறது.

October 7, 2014

திசைக்கு ஒரு தமிழன்

திசைக்கு ஒரு தமிழன்
திக்கற்று கிடக்கின்றான்
தனித்து போகும் பிணம்போல
தனிமை சுகமென்று சாகின்றான்.

காலம் கடந்து போன பாதையில்
காலனை கூவிஅழைக்கிறான் போதையில்
ஞாலம் புரியாத மயக்கத்தில் - அஞ்
ஞானக் கண்கொண்டு பார்கிறான் குழப்பத்தில்

முடிந்தவரை இருந்துவிட்டு
முதுகை சொரியும் பரம்பரையோ
முடிவுரை எழுதுவற்குள் - கிலி
முந்திக்கொண்டு சாய்கின்றான்.

ஏங்கிக் கிடகின்ற தமிழனுக்கு
ஏழ்மைதான் நிரந்திரமா?
தூங்கி வழிகிற தமிழனுக்கு
என்றுதான் சுகந்திரமோ?

ஆயுல் முடியும் முன்
ஆர்பரிக்கும் சோகம்
அடிமையாய் வாழ்வதற்க

ஆயிரம் சாதி பிண்டம்?

July 1, 2014

காதலற்ற மரணம்

அட 
நடந்துவந்த பாதை
நட்பில் பிரிந்து
நயவஞ்சகத்தில்
முடிகிறது.....

அங்கு முளைத்திருக்கும்
நினைவுச் சுவர்கள்
தாஜ்மாஹால் அல்ல
காதலற்ற மரணத்தின்
காமச்சுவடுகள்அவள்
விழிகளில்
சிறைப்பிடிக்கப்பட்ட
இதயம்
விந்தை                                                 எதுவென்றால்
பொழுது புலரும் முன்
பிம்பம்                                                                                                                                     புஷ்வனமாகிப் போவதுதான்                            

ஈரோடு தமிழன்பன் -கிழக்குச் சாரளம் 2005

நான் படித்த நூல்களின் சாரம்.

1. ஈரோடு தமிழன்பன் -கிழக்குச் சாரளம் 2005

கடைந்தெடுப்பது எல்லாம் கற்பனை என்றாலும் கவிதை சிலருக்குதான் காமதேனாக சுரந்து கற்பக விரிச்சமாக வேர்ப் பதித்திருப்பதில் வியப்பு ஒன்றுமில்லை.

சாதரணமாக நான் நடைப் பயிலும் கிள்ளான் துங்கு கிள்ளானவில் அமைந்துள்ள ஒரு புத்தகக்கடையில் என் கண்ணில் பட்ட ஒரு புதுக் கவிதை புத்தகத்தை கையில் எடுத்தேன். ஈரோடு தமிழன்பன் கவிதை தொகுப்பு அது. எனக்கு அறிமுகமில்லாத ஒரு கவிஞர். கவிதையை நோட்டமிட்டேன் புது கவிதையின் வரிகள் சாதரண இயல்பு நிலைக் கவிதைகளை கொண்டிருந்தது. வாங்கிய கவிதைகளை படித்த பிறகு எனது நூல் நிலைய அடுக்குகளில் வைத்து விட்டேன்.

சில காலம் சென்றபின் சை பீர்முகம்மதுவின் திசைகள் நோக்கிய பயணம் என்ற நூலை படித்துக்கொண்டிருந்த போது ஈரோடு தமிழன்பனை பற்றி குறிப்புகளை பார்த்த பின்புதான் முன்பு என் கரங்களில் தவழ்த்த புத்தகம் ஒரு மாபெரும் மனிதனின் சிந்தனையின் ஒரு துளி என்பதை அறிந்தேன். அவர் பன்முக ஆளுமை கொண்ட கலைஞர் என்பதை உணர்ந்தேன்.

கவிஞர் ஈரோடு தமிழன்பன் பரிந்துரை தேவைப்படாத பாட்டு பறவை. மனிதர்களுக்குதான் எத்தனை எத்தனை முகம்.கவிஞனாய் கலைஞனாய், எழுத்தை ஆள்பவனாய்.,ஓவியனாய், மரபுக் கவிஞராய், கவியரங்கக் கவிஞராய், புதுக்கவிதைக் கவிஞராய், சிறுகதை ஆசிரியராய், புதின ஆசிரியராய், நாடக ஆசிரியராக , சிறார் இலக்கியப் படைப்பாளியாக, வாழ்க்கை வரலாற்றாசிரியராக, திறனாய்வாளராய், கட்டுரையாளராய், சொற்பொழிவாளராய், திரைப்பட இயக்குநர், திரைப்பட பாடலாசிரியராக, என பன்முகப்பட்ட ஆளுமைகளைக் கொண்டிருப்பவர். ,அப்பப்பா எண்ணற்ற முகத்தில் ஒரு கவித்துவமான எண்ணச்சாரலின் சாயலில் கவிதை முகத்தை அல்லவா போர்த்திக் கொண்டிருகின்றார்.

கரந்தை தமிழ்ச்சங்கத்தின் மாணவர். அவரின் இயற்பெயர் ஜெகதீசன். பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள் என்ற நூல் அவரின் ஆகச் சிந்தனை. ஒரு மாமலையோடு பத்து ஆண்டுகள் என்பது அவரின் எழுத்தை புடம் போட்ட தங்கமாக அவரின் எழுத்து ஆளுமையை வெளிக்கொண்டிருக்கும் என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது.

கவிதையின் முதல் அர்த்தம் முற்றிலும் அர்த்தம் அது கவிதையாக இருப்பதுதான் என்கிறார். நிலவுக்கு அது வெளிச்சமாக இருப்பது அர்த்தம். நெருப்புக்கு வெப்பமாக இருப்பதைவிட வேறு என்ன தனியான அர்த்தம் இருக்க முடியும் என்று வினா எழுப்புகின்றார்.

கவிதை கவிதையாகாமல் அர்த்தமாகிவிடுவதை ஒருபோதும் உண்மை கவிஞன் ஒப்புக்கொள்ளமாட்டான். அர்த்தங்களே கவிதையாக வேண்டும் என்கிறார் தமிழன்பன்
கவிதை தன் கவிதையாவதற்கு வார்த்தைகளை காட்டிலும், அர்த்தங்களைக் காட்டிலும் அது வாழ்க்கையையே நம்பி இருகின்றது.

வாழ்க்கையின் அர்த்தம் அனுபவங்களை தெரிந்தும் தெரியாமலும் புரிந்தும் புரியாமலும் சிதறிக்கிடக்கிறது .திரட்டி சேர்க்க முற்படும் பொழுது கவிதையும் சிதறிவிடுகிறது.
- “பச்சை ஆன்மாவுக்குள் படபடக்கும் என் சிறகுகள்
கவிதை முகம் காணாமல் காத்துக் கிடக்கிறது சொற்கள்.”.

நெருப்பென்று சொன்னால்.. என்ற .தலைப்பில்
“நெருப்பைக்
கவிதையில் மூட்டிவிட்டுப்
படுத்தேன் நேற்றிரவு
விடியலில்
சாம்பலில் நான்”

எது அழகு?
என்னும் கவிதையில்
“தண்ணீர் முடிச்சுக்களை
அவிழ்த்துக் கொண்டு
கரைக்கு வரும் அழகு
முற்றுப்புள்ளிகளாய்
உதிர்ந்து கிடக்கும் மணல்கள் ”
இன்னும்………….
“அழகு அழகின் முன் அழிகிறது
அழியும் அழகா உண்மை அழகு ?” – புது கவிதையில் எது அழகு என்று கூற வருகின்றார்..

பாரதிதாசனின் பாசறையில் பயணித்தவரின் கவிதைகள் புதுக் கவிதையாய் புறப்பட்டிருப்பது ஒரு மாறுப்பட்ட சிந்தனை களம். அது ஒரு மரபுக்கவிதையில் இருந்து மாற்று உருக்கொண்டு புது கிளைகளை பரப்பியிருப்பது நமது உள்ளம் கிழக்கு சாளரத்தின் வழி புது உதயத்தை தொட்டிருப்பதுதான். ஆனால் கிழக்கு சாளரத்தின் மொழி நடை இயல்பு மொழியில் அமைந்திருப்பது ஏனோ ஈரோடு தமிழன்பனின் மரபுக் கவிதை வளம் இன்னும் எம்கரங்களின் வந்துச் சேரவில்லை என்றே தோன்றுகின்றது.. இன்னும் அவரின் பல கவிதைகளை தேடி எடுத்து முத்துக் குளிக்க முயற்சிகின்றேன்.

பாரதிதாசனின் பல படிகளை கடந்து வந்தவரின்

“ திக்குகளின் புதல்வர்கள்
தேசவரம் பற்றவர்கள் “

என்று அவர் கூறும் பொழுது அவரின் பழைய குறுகிய எல்லைகள் கைவிடப்பட்டமை நமக்கு புலனாகிறது.. கவிஞர் மு. மேத்தா சொல்வது போல் ஆரவாரமற்ற சொற்கள் அழகிய கவிதயாகின்றன.

குறிப்பு..இங்கு நான் படித்த புத்தகத்தின் சாரத்தையும் அதன் அழகிய சிந்தனைகளை மட்டும் முன் வைக்கின்றேன்.

-

May 28, 2014

i.cஎன்னதான் செய்வது?
மாற்றங்கள் இல்லை என்றாலும்
ஏற்றங்கள் எம்மிடம் வருவதில்லை.....
என் விரலுக்கு ஏற்ற வீக்கங்கள்
என் செலவுகளில் எகிறிகுதிக்கிறது
காரணத்தை சொல்ல  நான் மறுப்பதில்லை
காலவதியாகிப் போன என் சம்பளம்
காரியங்களை சாதிப்பதற்கு போதுமானதில்லை
விலைவாசி உயர்ந்த அளவுக்கு
எங்களை உயர்த்தாமல் போனது.......         I. C......
என்னதான் செய்வது?May 7, 2014

மும்தாஜ்


பளிங்கு முற்றத்தில்
பூத்த தாஜ் மாஹால்
நிலவின் மயக்கத்தில்
மும்தாஜின் காதல் மட்டும்
கல்லறை பூக்களானது
ரத்தக்கறை படிந்திருக்கும்
வெள்ளை ரோஜா
காதலின் பெயரால்
காட்சிப் பொருளானது..

May 3, 2014

நல்லத்தங்காள்நீண்டுக்கொண்டிருக்கும்
சலணங்களை துறந்துவிட்டு
மவுணமாக பயணத்தில்
என் முன் நகர்ந்துக் கொண்டிருக்கிறது
ஆதியின் நிஷ்டை


சித்தத்தில் முழ்கிய போது
நித்தியத்தில் தேவனை
என் கண்முன் நிறுத்தியது
அவளின் உருவம்
அவள் யாராக இருந்தாள்
எனக்கென்ன

துறக்க நினைத்ததை
துறந்த போது
என் மனதின்
தின்மையை மட்டும்
துறக்க முடியாமல்
தவித்தபோதும்...
ஒவ்வொன்றாக
வீசிக் கொண்டிருகின்றாள்
நல்லத்தங்காள்
என் மனப்புழுக்களை......April 23, 2014

முதிர்ந்த காதல்


கண்ணின்மணி கொண்டு
கனவுத் துளிகள்
என்னை அறியாமல்
கடந்தேறுக்கின்றன

நிலவின் வெளிச்சத்தில்
நித்தியத்தின் துறலில்
நிஜமானது
ஒரு நிகழ்ச்சி நிரல்


வனதின் முகப்பில்
வடிந்துபோன உள்ளத்தில்
வார்த்தெடுத்துத்போனது
கடந்து போன காதல்
கடக்க நினைக்கும் தூரம்
அந்திமக் காலம்

இலை உதிரா காலத்தில்
இனிமையான நேரத்தில்
இலவம் பஞ்சாய்
பறந்த காதல்
முதிர்ந்த காலத்தில்
அன்பை சுமந்து
முழு நிலவாய் தெரிகிறதுMarch 21, 2014

உலகப்புகழ் பெற்ற உமார்கய்யாம் பாடல்கள்


உலகப்புகழ் பெற்ற உமார்கய்யாம் பாடல்கள்

உலகில் உள்ள தலைச்சிறந்த கவிதைகளை தமிழில் மொழிபெயர்ப்பது என்பது சுலபமான விஷயம் அல்ல. 800 வருடங்களுக்கு முன் பிறப்பெடுத்த ஒரு கவிதையை, அதுவும் கரு சிதைவுப்படாமல் எழுதுவதற்கு கவித் திறனும் தமிழில் ஆளுமையும் ஒருங்கே  பெற்ற சிலரால் அந்த கவிதையை அற்புத் நடையில் மாற்றுக் குறையாமல் ஒரு அசல் தமிழ் கவிதையாகவே நமக்கு தரமுடியும்.

உமர் பாரசீகத்தில் ஆப்கானிஸ்தானை ஒட்டிய குராசான் பகுதியில் பிறந்தவர். 1048- லிருந்து 1131 வரை வாழ்ந்தவர். நமக்குத் தெரிந்த கஜினியின் காலம். பல படையெடுப்புகள் ஆக்கிரமிப்புகளிடையே வாழ்ந்தவர். எது எப்படியானால் என்ன மதுவும் மாதுவும் கவிதையும் தான் மகிழ்ச்சி தருவன மற்றவற்றைப் பற்றிக் கவலையில்லை என்ற ஒருவாறான களியாட்டத்தில் வாழ்க்கையைக் கடத்த விரும்பியவர் என்பதல்லாது ஒரு பரந்த உலகப்பார்வையும் வாழ்க்கை நோக்கும் கொண்டவர், அவர் காலத்தில் ஆட்சி செய்திருக்கக் கூடிய மதக் கட்டுப்பாடுகளை, நம்பிக்கைகளை கேலியுடன் மீறி வாழ்ந்தவர், ஒரு சூஃபி போல என்று தெரிகிறது. இஸ்லாம் மிகுந்த வீரியத்துடன் பரவி வந்த காலத்தில், படையெடுப்புகளின் மத்தியில் வாழும் நிச்சயமின்மையையும் ஆபத்துக்களையும் மீறி தனக்கென ஒரு வாழ்நெறியைக் கொண்டு அதை ருபாய்யத்துக்களாக வெளிப்படுத்தியதும் பெரிய விஷயங்கள் தான். அவர் காலத்தில் அவர் பலரது எதிர்ப்பையும் எதிர்கொண்டு தான் வாழ்ந்தார் என்பதும், ருபாய்யத் அவ்வளவும் உமருடையது அல்ல என்று சொல்லப்படுவதும் புதிய செய்திகள்.

உலக புகழ்ப் பெற்ற உன்னத கவிஞர் உமார்கய்யாம். அவருடைய “ருபாயத்” பாரசீக கவிதையில், இது ஒரு புது மாதிரி. இந்த உலகத்தையே அவருடைய சொர்க்கமாக நினைத்து அதிலே உருகி எழுந்த கவிதைகள். உமார்கய்யாமை ஒரு நாஸ்திகவாதி என்கிறார்கள். அவருக்கு விதியில் நம்பிக்கையுண்டு. உமார் மது மாதுவை கருப்பொருளாக பாடியதற்கு உட்பொருள் உண்டு என்கின்றனர். அவர் ஒரு வேதாந்தி.

இன்னொமொரு ருபாய்யத், சாதாரண மக்கள் கேட்பது.\

மதத்தின் நீதிமான்களே, உங்களைவிட நன்றாக
உழைக்கிறோம் நாங்கள்,
இவ்வளவு குடிபோதையிலும் மிகவும் நிதானமானவர்கள்
நாங்கள்,
நீங்கள் குடிப்பது மனித இரத்தத்தை, நாங்கள் குடிப்பது
திராட்சையின் ரத்தத்தை,
உண்மையாகச் சொல்லுங்கள் - நம்மில் யார் அதிக
ரத்த வெறி பிடித்தவர்கள்?

இன்று அதே பாரசீகத்தில் உமர் இன்றைய அயொத்தொல்லாக்கள் கையில் என்ன பாடு பட்டிருப்பார்? உயிரோடு இருந்திருப்பாரா? ருபாய்யத்துகள் நமக்குக் கிடைத்திருக்குமா?

உமர் கய்யாம் ஒரு வித்தியாசமான முஸ்லீம். வித்தியாசமான கவிஞர். அவர் தன்னைப் பற்றிச் சொல்லிக்கொள்ளும் ருயாய்யத் ஒன்று உண்டு.

விலக்கப்பட்ட மதுவருந்தி போதை கொண்டேனா,
ஆம், அப்படித்தான்!
நான் அசுவிசுவாசியா, புறவினத்தானா அல்லது
உருவ வழிபாட்டானா, ஆம் அப்படித்தான்!
மதத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் சந்தேகமுண்டு,
என்னைப் பற்றி;
நானோ, நானாக மட்டுமே இருக்கிறேன்.

அவர் வாழ்ந்தது பார்சிகளைத் துரத்திக்கொண்டிருந்த இஸ்லாமாகிக் கொண்டிருந்த பாரசீகத்தில்.. இருப்பினும் அங்கு ஒரு உமர் பிறந்தார். ருபாய்யத்துகளை எழுதி அவர் வாழ முடிந்திருக்கிறது. அன்னிய படையெடுப்புக்களுக்கும் ஆக்கிரமிப்புக்களுக்கும், மாறும் மத நம்பிக்கைகளுக்கும் இரையாகிக் கொண்டிருந்த பாரசீகம் அது.

கடவுள், ரோஜா மலர்கள், திராசை ரசம், அந்த  ரசம் ததும்பி வழியும் பாத்திரம், அதை ஊற்றும் ஜீவனுள்ள பெண்,இவற்றுக்குள் அவருடைய வேதாந்தம் எங்கும் பரவியிருக்கிறது. மதுவை பற்றி அவர் பாடியிப்பதற்கு மேல் யாரும் பாடியிருக்க முடியுமா என்பதே சந்தேகம் தான்.

உமார் கய்யாமின் ருபாயத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த எட்வர்ட் பிட்ஜெரால்ட் என்பவரை சொல்லித்தான் ஆகவேண்டும்.  இவர் 1859ம் ஆண்டு “ருபாயத்தை மொழிப்பெயர்த்தார். அவருடைய ஆங்கில ருபாயத் பெற்ற எல்லையற்ற புகழுக்குப் பின்னால், ராஸெட்டி,ஸ்வின்பன் முதலிய ஆங்கில கவிகள் அதை கண்டெடுத்துப் பாராட்டிய பிறகு அது உலகப் புகழ் பெற்றது. பிட்ஜெரால்ட் மொழிபெயர்ப்பு மொழியின்ப மெருகு பெற்றது.

தமிழிலே உமார் கய்யாமின் கவிதைகளை வேறு எவராயினும் மொழிபெயர்த்திருக்கின்றார்கள என்று தெரியவில்லை. ஆனாலும் இருபெரும் கவிஞர்கள் கவிமணி சி. தேசிக விநாயகம் பிள்ளையும் ச.து சு.யோகியார் அவர்களின் மொழிபெயர்ப்பில் வழி கவிமணி தேசிக விநாயகம் நடையில் பழுத்த கனிந்த உள்ளம் ஆனந்தமாக அமைதியாக உலா வருகிறது. யோகியரின் நடையில் இளமையின் விறுவிறுப்புடன் நடைப்பயில்கிறது. அதே போன்று தங்க ஜெயராமன் - ஆசை மொழிபெர்ப்பும் நவீன நடையில் வீராப்புடன் நடைப் பயில்கின்றது.
Here with a loaf of bread beneath the bough
A flask of wine, a book of verse and thou
Beside me singing in the wilderness
Wilderness is paradise enow.
ஜாடி மதுவும் கவிதை நூலும்
ரொட்டித் துண்டும் வேண்டும் எனக்கு,
பிறகு நீயும் நானும் யாருமற்ற இடத்தில்
சுல்தானின் ராஜ்யத்தை விட அதிக செல்வம் நமதாகும்.
பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களை எட்வர்ட் பிட்ஸ் ஜெரால்டு ஆங்கிலத்தில் ஆக்கியுள்ளார். கவிமணி ஆங்கில நூலைத் தழுவித் தம் நூலைப் படைத்துள்ளார். இப்பாடலின் தழுவலாக கவிமணி எழுதிய கீழ்க்கண்ட பாடல் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றது.

வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வகீதம் பலவுண்டு
தெரிந்து பாட நீயுண்டு
வையந் தருமிவ் வனமன்றி
வாழும் சொர்க்கம் வேறுண்டோ!

ருபாயத்துக்கள் முதன் முறையாக தமிழில் நமக்குப் படிக்கக் கிடைத்துள்ளன. படித்ததும் மனதில் எழும் காட்சிகளே ஒரு சௌந்தர்ய உணர்வைத்தைத் தருகின்றன. மூல பாரசீகமொழியில் இவற்றின் சப்த ரூபம் எவ்வளவு இனிமையைத் தரும் என்று கற்பனை செல்கிறது. அதுவே மனதுக்கும் இனிமை தருகிறது.

மேலும் சில உமார் கய்யாமின் கவிதை துளிகள் தமிழ் மொழிபெயர்பில்

கடவுள் ஒளி, நாம் கடவுளின் நிழல் 
ஒளியே நிழலாம் உண்மை அறிந்தேன்

அன்பின் விளக்கம்;  அதனை இதயக்
குகையில் ஏற்றுவாய்; குலவிய தழலில்
இன்பம் துன்பம் யாவும் எரிகவே.

மேற்குறிப்பு - உமார்கய்யாம் பாடல்கள்
கவிமணி சி. தேசிக விநாயகம் பிள்ளை                                    ச.து சுப்பிரமணிய யோகியார்

 -ஓமர் கய்யாம் ருபாய்யத்: (தமிழில்: தங்க ஜெயராமன்ஆசை)
க்ரியா வெளியீடு

உமர் கய்யாமின் ருபாய்யத்
June 19, 2012