January 6, 2012

மழைக்காலத்தில் ஒரு நாள் மலைவாசம்நாடெங்கும் அடர்ந்த மழை. சில இடங்களில் மண்சரிவு.பல இடங்களில் வெள்ளம் என்ற செய்தி. இடைவிடாமல் பெய்யும் மழையை மீறி எங்களின் வெளியூர் பயணம் தொடங்கியது. அங்கங்கே வானம் கருமையை காட்டி எங்களை பயமுறுத்திக் கொண்டிருந்தது. என் மனைவியின் நீண்ட பள்ளி விடுமுறை முடிவதற்கு இன்னும் மூன்று வாரங்கள்தான், அதற்குள் எங்காவது சென்று வர வேண்டும் என்று என் மனைவி வற்புறுத்திக் கொண்டிருந்தாள். இருப்பதோ மூன்று வாரங்கள் மட்டும். அதிலும் பள்ளி விடுமுறை ஆரம்பிக்கும் முதல் வாரமும் பிறகு இறுதி இரண்டு வாரங்கள் கண்டிப்பாக பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பது சில தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் எழுதாத விதியாக இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் நானும் என் மனைவியும் மலைவாசம் நோக்கி புறப்பட்டோம்.

மழைக்காலம் என்பதால் எங்கும் குளிர்ச்சிதான். காலை மாலை இரவு என்று மழைக்கு நேரங்காலம் தெரியவில்லை போலும் என்று நொந்துக்கொண்டே புறப்பட்டோம். அப்படி இப்படி என்று வீட்டை விட்டு கிளம்புவதற்கு காலை மணி 9 ஆகிவிட்டிருந்தது. கிளம்புவதற்கு முன் என் மனைவி சமைத்திருந்த நாசி லெமாவை எடுத்துக்கொண்டோம். இது திட்டமிடாத பயணம் என்பதால் சற்று தயக்கத்தோடுதான் கிளம்பினோம். மழையோடு இது மழைக்கால பயணம் என்பதால் சற்று சிரத்தையோடு வாகனத்தை செலுத்த வேண்டிய சூழ்நிலை.

அவ்வப்போது மழை தூறல்கள் எங்கள் வாகனத்தை பின் தொடர்ந்துக் கொண்டிருந்தது. நல்ல காலம் இன்று தூறலோடு மழை எங்களோடு உறவாடிக்கொண்டிருந்தது. பெரும் மழை எங்களின் பயணத்தை தடுக்கவில்லை.


பிலாஸ் என்ற வடக்கையும் தெற்கையும் இணைக்கும் நீண்ட அழகான மலேசிய பெருவெளி திட்ட நெடுஞ்சாலை அது. தித்தி வங்சா என்ற மலைத்தொடரை ஒட்டி இயற்கை காட்சிகள் நிறந்த அந்த நெடுஞ்சாலையில் எங்களின் வாகனம் ஒரே சீராக சென்றுக் கொண்டிருந்தது. எங்கும் பெரும் காடுகள். அல்லது செம்பனைத் தோட்டங்கள்.எங்கும் பசுமை. மலேசிய திரு நாட்டை என்னவென்பது? காடுகளின் சொர்க்கபுரி என்றுதான் சொல்லவேண்டும்.

எங்களின் அடுத்த இலக்கு தாப்பாவில் இருக்கும் (tapah ) ஓய்வு எடுக்குமிடம்தான். நாங்கள் கொண்டு வந்திருந்த சாப்பாட்டை ஒரு கை பார்த்துவிட்டு எங்களின் கேமரன் மலைப்பயணத்தை தொடங்கினோம். பயணம் தொடங்கி சற்று நேரத்தில் பெரும் நீர்வீழ்ச்சி வானத்தில் இருந்து பூமியில் கொட்டுவது போன்று ஒரு அற்புத காட்சியை அந்த நெடுஞ்சாலையில் பார்க்க முடிந்தது. அதை பார்பதற்கு கண்கள் கோடி வேண்டும் என்றால் மிகையல்ல.

ஒரு வழியாக நெடுஞ்சாலை விட்டு கேமரன் மலைப்பாதையை நோக்கி எங்களின் வாகனம் நகர்ந்துக்கொண்டிருந்தது. கேமரன் மலைச்சாலை என்றாலே அபயகரமான வலைவுகளை கொண்டது. அதுவும் இந்த மழை நேரத்தில் பாதை படு பயங்கரமாகத்தான் தெரிந்து. எப்படிதான் காய்க்கறி வாகனங்களும் சிறுரக சரக்கு ஊந்துகளும் சர்வ சாதரணமாக மலைகளில் ஏறி இறங்குகின்றனவோ? ஆண்டவனுக்குதான் வெளிச்சம்.

எங்கும் மேடு பள்ளங்கள். சில சமயங்களில் மலை முகடுகளையும் சில சமயங்களில் பெரும் பள்ளங்களையும் கடந்துக்கொண்டிருந்தது வாகனம். வழி நெடுக்க உயர்ந்த பெரிய மரங்கள். டைனோசோர் காலத்து மரங்களா என்று தெரியவில்லை. சில இடங்களில் மலையை ஒட்டிய சாலையும் அதன் பக்கத்தில் பெரும் பள்ளங்கள். சில இடங்களில் அழகிய நீர்விழ்ச்சிகள். போகும் பாதை அங்கங்கே பூர்வகுடி மக்களின் குடிசைகள். சில இடங்களில் சூரிய வெளிச்சம் கூட தரை இறங்க முடியாமல் ஓங்கி உயர்ந்த காடுகள் மட்டுப்படுத்திக்கொண்டிருந்தது.அந்த அடர்ந்த காட்டில் ஒரு மெல்லிய கோடுகளின் கிறுக்கல்கள் போன்று சென்றுக் கொண்டிருந்தது கேமரன் மலைச் சாலை.

“தான ராத்தா”, “ரிங்லெட்” போன்ற சில ஊர்கள் கடந்து சென்று :”பேரின்சாங்” என்ற சிறு பட்டிணத்தை அடைந்தோம். அது கேமரன் மலை உச்சியில் உள்ள மலைவாச தளம். நாங்கள் சென்ற நேரம் சிறு சிறு தூறலில் மழை பெய்துக் கொண்டிருந்தது. சிறு பட்டிணமாக இருந்தாதும் பாதைகள் பிரிக்கப்பட்டு ஒருவழிச் சாலையாக மாற்றப்பட்டதனால் சில இடங்களில் சாலை நெரிச்சல். “ இது என்ன தலைநகரிலே அதிக வாகன நெரிச்சல் என்று மலைவாசத்தை நோக்கி வந்தால் இங்கு அதே பிரச்சனைதான் என்று நானும் என் மணைவியும் நெந்துக்கொண்டோம். சற்று நேரத்தில் அதற்கு விடையும் கிடைத்தது. இரவுச் சந்தை சாலை ஓரத்தில் நடைப்பெற்றுக் கொண்டிருந்தது, மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. ஒரு வழியாக தங்கும் விடுதியை தேடி கண்டுப்பிடித்து எங்களின் அறையிலே வாகனத்தில் இருந்த சுமைகளை இறக்கிவிட்டோம். “அப்பாடா” என்று ஒரு குளியல் போட்டு விட்டு, மறுபடியும் கிழ் இறங்கி பாசார் மாலம் என்று சொல்லப்படுகின்ற இரவு சந்தைக்கு நுளைந்தோம்.

என் மனைவி அதிகம் விலைப்பட்டியலை ஆராய்ச்சி பண்ணுபவள். கோலாலம்பூரை விட இங்கு விலை அதிகம் என்றாள்.....இருக்கலாம் நமக்கு என்ன தெரியும்? சில பொருட்களை மட்டும் வாங்கிக்கொண்டு அந்த சிறு பட்டிணத்தையும் ஒரு நோக்கமிட்டோம்...அப்பப்பா என்ன வளர்ச்சி. சில வருடங்கள்தான் வரவில்லை இங்கு, அதற்குள் பெரும் மாற்றங்களை காணமுடிந்தது. பட்டிணம் வளர்ந்திருந்தது. ஆனால் மக்களின் வளம் பெருகி இருக்கின்றதா என்றால் தெரியவில்லை என்று தான் பதில் கூறமுடியும். தமிழர்கள் நிறைந்து வாழுமிடம் ஆனால் அங்கு தமிழர்களை பெரிய அளவில் பார்க்கமுடியவில்ல அன்று. ஒரு வேளை மழைக்காலம் என்பதால் குளிரிலே வீட்டில் முடங்கிக்கிடக்கலாம் யார் அறிவார்?

ஒரு காலத்தில் கேமரன் மலை என்றால் கடும் குளிர்தான் நினவுக்கு வரும். அப்பேர்பட்ட குளிர், எங்கு ஓடி ஒளிந்ததோ தெரியவில்லை. என் சிறு பிராயத்தில் என் தாய் கூறுவார் என் சகோதரர் அங்கு வேலைக்கு சென்ற போது குளிரிலே தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடி வந்துவிட்டார் என்று. காலை குளிர் படு பயங்கரமாக இருக்கும் என்று கேள்வி. ஆனால் இப்பொழுது குளிர் அவ்வளவு கடுமை இல்லை. மலைகளை கரைத்துவிட்டால் எப்படி இயற்கை நம்மோடு ஒத்துபோகும்?

மழைத்தூறல் ஒருபக்கம் மழையில் நனைந்த சாலைகள் எங்கும் பிசுபிசுத்துகிடந்தன. சுற்றிவந்த அலுப்பு ஒரு புறம், மறுபடியும் ஒரு குளியல் போட்டு படுத்தவுடன் மறு நாள் காலையில் 7.00 மணிக்கு தான் எழுந்தோம்.

காலை கதிரவன் எங்களோடு போட்டிப் போட்டு எழுந்துவிட்டான் போலும். எங்கும் பனி மூட்டம். மெல்லிய குளிர்ந்த காற்று விசிக்கொண்டிருந்தது. அப்படியே பொடி பக்கத்தில் இருக்கும் stewbery பண்ணைக்கு சென்று அங்கு நவின விவசாய முறைகளை நேரடியாகவே பார்த்தோம்.


அது ஒரு தமிழரின் அதிநவின விவசாய பண்ணை. நெதர்லாந்து நாட்டில் இருந்து தருவிக்கப் பட்ட விதைகளில் இருந்து பயிரிடப்படுகிறது. அவ்வகையான காய்க்கறிகளை நெதர்லாந்து நாட்டிற்கே விற்கப்படுகிறதாம்.

ஒரு சிறிய விளக்க உரையுடன் அங்கு வேலைச் செய்த ஒரு தமிழ் நாட்டு வாலிபர் விளவாரியாக சொல்லிக்கொண்டிருந்தார். சரி என்று சில காய்கறிகளை வாங்கிக்கொண்டு நாங்களும் எங்களின் தங்கும் விடுதியை நோக்கி நடையை கட்டினோம்.
நேரம் பிற்பகல் 12 காட்டிக்கொண்டிருந்தது. விடுதியை காலிசெய்யவேண்டிய நேரம் நெருங்குவதால் விடுதிக்குள்ளான பணத்தைக்கட்டி எங்களின் பொருட்களின் எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.

மலை உச்சியில் இருந்து மறுபடியும் கிள்ளான் சமவெளியை நோக்கிய எங்களின் மழைக்கால பயணம் தொடங்கியது. மனதுக்கு இதமான பயனம். நேரம் பற்றக்குறைதான். இல்லை என்றால் இன்னும் சில திங்கள் தங்கி மன நிம்மதியை நாடி இல்லை இல்லை மன நிம்மதியை வேண்டி விடைப்பெற்று கிளம்மியிருக்கலாம். குறுகிய கால பயணம் என்றாலும் கேமரன் மலைப் பயணம் ஒரு அற்புதமான நினைவுகளை சுமந்து கொண்டு எங்களின் மனம் வீடு நோக்கி பயணப்பட்டது.
Post a Comment