November 26, 2011

ஜிப்ரானின் காதல் கடிதங்கள் - கவிதையா? காவியமா?

தமிழ் இலக்கியங்களில் சங்கம்.. சங்கம்... சங்கப்பாடல்கள் என்று ஆயிரம் நூற்றாண்டை தான் நாம் முன் உதாரணப்படுத்துகின்றோம். அகப் பாடல்களில் வெளிப்படும் மன உணர்வுகளுடன் கூடிய வாழ்க்கை கூறுகளை அற்புதமாக கவிதை புனையும் அறிவும் கலை மாண்புகளை வெளிப்படுத்தும் ஆற்றலும் இன்றைய நூற்றாண்டு தமிழர்களிடம் இல்லையா? நமது சமுதாய கூறுகளை நளினமான இலக்கிய ஆற்றளோடு வெளிக்கொணர வேண்டிய சூழல் இன்னும் எழவில்லையா?

பல நூற்றாண்டுகளாக நம்மிடம் மகா கவிகள் தோன்றவில்லையா? தோன்றியிருக்கின்றார்கள் !. உலகப்புகழ்ப் பெற்ற சித்தாந்த வாதிகள் நம்மிடயே வாழவில்லையா? வாழ்ந்திருக்கின்றார்கள் !. நமது கவிதைகள் சித்தாந்தங்கள், சிந்தனை கருந்துக்களை உலகம் ஏற்றுக்கொண்டு போற்றிப் பாடுகிறதா? அற்புதமான நடைமுறை தமிழர்களின் வாழ்வியல் கருத்துக்கள் உலக சமுதாயத்திற்கு நாம் கொண்டு செல்ல தவறிவிட்டோமா? அல்லது உலக தரத்திற்கு ஏற்ற கவித்திறனோ, எழுச்சிக்கொண்ட சொல்லாடல்களை படைக்கும் தத்துவ முதிர்ச்சிக்கொண்ட இலக்கிய வாதிகள் நம்மிடம் இல்லையா என்ன? உண்டு! ஆனால் தமிழ் மொழி சார்ந்த மொழி பெயர்ப்பு இலக்கியங்களை உலக மொழியில் நாம் இயற்றவில்லை என்றே தோன்றுகிறது.

சங்கம் மறுவிய காலம் தொட்டு தமிழர்களின் இயல்பு வாழ்க்கையையும் அவர்களின் சிந்தனை சாரத்தையும் வாழ்க்கை நெறிகளையும் சிறப்பாக வடிக்க தவறிவிட்டோம் என்றுதான் நினைக்கின்றேன். ஆனாலும் வேற்று மொழி சிந்தனைகள், சித்தாந்தங்கள், கவிதைகள், கருப்பொருள்கள். அவர்களின் உள்ளக்கிடங்குகளை அற்புதமாக வெளிக்கொணர்ந்திருக்கின்றன. என்னற்ற கவிதைகள் கட்டுரைகள், மொழிப்பெயற்புக்களாக தமிழ்க்கூறும் நல்லுலகில் வலம் வந்துக்கொண்டிருகின்றன. நமது சிந்தனைகளை விட அவர்களின் சிந்தனை திறன் மேல் என்பதைவிட அவர்கள் இன்னும் சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர். நாம் செயலிழந்து விட்டோம் என்பதே உண்மை.

நேரடியான மொழிச்சார்ந்த படைப்புக்கள் போன்று உயிரோட்டமான கற்பனைகளையும் சிந்தனைகளையும் சுமந்து நிற்கும். கவிஞனின் கவிதை மனதுக்கும் அதை படிக்கும் வாசகனின் பார்வைக்கும் ஒரு உயிர்ப்பிக்கும் பாலமாகவும் அதே சமயம் ஆத்மாபூர்வமான உணர்வுகளில் பிணைந்திருக்கும் அற்புத களமாக அந்த கவிஞனின் உள்ள கிடங்கு தெரியும்.

பொதுவாகவே மொழிப்பெயர்ப்பு கவிதைகள் என்றாலே அதிலே ஆழமான அர்த்தங்களும் ஈர்ப்பு தன்மையும் குறைந்துதான் காணப்படும். அதையும் மீறி சில மொழி பெயர்ப்புக்கவிதைகள் மன உணர்வுகளை அப்படியே கிளர்ச்சிக்கொள்ளும் வகையில் அற்புதமாக காட்டப்பட்டிருக்கின்றன. அது மொழிப்பெயர்ப்பா இல்லை தமிழ் மொழியில் படைக்கப்பட்ட நேரடி ஆக்கங்களா என்னுமளவுக்கு மிகச் சிறந்த வெளியிடாக காணப்படுகிறது.
உண்மையில் சொல்லப்போனால் அப்படி ஒரு சிறந்த படைப்புக்களுக்கு சொந்தக்காரர்தான் லெபனானில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்த ஜிப்ரான். அவருடைய இரண்டு படைப்புக்களைதான் என்னால் படிக்க முடிந்தது. என் கண்களில் பட்ட அந்த அற்புத படைப்பிலக்கியங்களில் ஒவ்வொரு வார்த்தைகளும் கவிதைகளாகவும் ஒவ்வொரு கவிதையும் காவியங்களாகவும், மானுடத்தை உயிர்ப்பிக்கும் மன உணர்வுகளை கலை வடிவில் வெளிப்படுத்துகின்றன.

வானத்துக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தூரத்தை வார்த்தை கோவைகளாக வார்த்தெடுத்திருக்கின்றார் என்றால் அது மிகை அல்ல. ஒவ்வொரு வார்த்தையும் அற்புத துளிகளாக மன பூமியெங்கும் படர்ந்திருகின்றன.

நான் சில சமயங்களில் வியந்து படித்திருக்கின்றேன். அவருக்கு மட்டும் தத்துவங்கள் எல்லாம் எப்படி கவிதையாய் பூக்கிறது அவர் மனதில்யென்று?

ஜிப்ரானின் காதல் கடிதங்களின் தொகுப்பு.காதக் கடிதத்தை எப்படி கவிதை நடையில் உருமாற்றி உண்னத படைப்பாக நமக்கு தந்திருப்பதே போற்றுதல்குறிய ஒன்றாகவெ தெரிகிறது. இது கவிதையா இல்லை கடிதமா ?

இதோ சில தேன்துளிகள்.........

“அது ஒரு தெய்வீக நிலை.
தூரத்தில் இருப்பதை அருகே கொண்டு வருவது
மறைந்திருப்பதை வெளிப்படுதுவது
அனைத்தையும் ஜொலிக்கச் செய்வது”............

கடிதத்தில் கவிதை அன்றோ! கவிதையில் கடிதமா என்று தெரியவில்லை.

“சொர்க்கதின் அந்த நீலச்வாலை நிலை
மாற்றமில்லாதது. மாற்றும் வல்லமையுடையது.
மாறக்கூடியதல்ல, உத்தரவுகளை இடுவது
உத்தரவுகளுக்குப்பணிவதல்ல.”

..................தொடர்ந்து படியுங்கள்.

இரண்டு ஆத்மாக்களின் தமது ஸ்தூல வடிவில் கலந்து உறவாடியதன் சொல் வடிவமே ஜிப்ரானின் காதல் கடிதங்கள்.

“வலியின் விதைகள் தூவிய வடிவில்,
தனிமை நாற்று நட்டிருக்கும் வயலில்
பசியும் தாகமும் அறுவடை,
செய்யும் வயலின் கேலிப் பேச்சு
வளர்ந்து பயிராக முடியுமென்கிறாயா?”

எப்படிப்பட்ட கேலிப்பேச்சுக்கள் கூட சித்தாந்தங்களை சுமந்து நின்று கவிதையாய் வளம் பெருகிறது என்பதை நினைக்கும் போது மொழிப்பெயர்புக்கவிதைகளில் நமக்கும் பெரும் நாட்டம் ஏற்படுகிறது.

இன்றைய நூற்றாண்டு இலக்கியவாதிகளான பாரதி பாரதிதாசன் கண்ணதாசன் வைரமுத்து என்று வாலையடி வாலையாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் கவிப்பரப்பரைகள் இன்றளவு உயிர்ப்போடு கவிதைகளை படைத்திருந்தாலும் அவர்களின் கருத்துக்கள் உலக சமுதாயத்தை எட்டாமல் போனதற்கு மொழி பெயர்ப்பு இலக்கியம் நம்மிடம் வளராமல் போனதே அதற்கு காரணமாகும்
Post a Comment