October 27, 2011

ஆன்மாக்களின் தரிசனமும் கடவுளின் வார்த்தைகளும்
யாருக்கும் அறிமுகம் இல்லாத அவன் பெயர் யாருக்கு தெரியும்? போக்கிரித்தனமான சித்து விளையாட்டை நடத்தும் அரசியல் வாதியாய் இருந்தால் நாளுப்பேருக்கு தெரியும். ஒரு நாட்டின் அடிச்சுவட்டை மாற்றும் திறன்படைத்த சரித்திர வாதியாய் இருந்தால் ஒரு வேளை உலகிற்கு தெரிந்திருக்கலாம். இல்லை சமுக நீதிக்காக போராடும் சமத்துவாதியாய் இருந்தால் இன்நேரம் உலகம் அறிந்திருக்கும் அவன் பெயரை. ஏக போகங்களோடு உலகம் உய்ய அவதரித்த நித்தியானந்தர் மாதிரி ஏமாற்று புருஷ்சராய் இருந்தால் இந்த உலகம் அவனை ஏரேடுத்து பார்த்திருக்கும். இல்லை பதவி பட்டம் பகட்டான வாழ்க்கை என்று தன்னலத்தோடு வாழ்க்கை பூராவும் நடித்துக் கொண்டிருக்கும் நவசர நடிகனாய் இருந்திருந்தால் ஒரு வேளை உலகம் அவனை அடையாளம் கண்டிருக்கும். ஏதும் அறியாத எதுவும் தெரியாத அப்பாவியான அவனையா இந்த உலகம் கண்டுக்கொள்ளப் போகிறது?

இவன் யார் என்று யாருக்கும் தெரிந்ததில்லை. எங்கிருந்து வந்தான்? எதற்காக வந்தான் என்பதுகூட எவருக்கும் தெரியாது. அதிகம் பேசா மடந்தையாகத்தான் ஊர் கண்ணுக்கு அவன் தெரிந்தான். எப்போழுதும் மவுணத்தில் இருப்பான். இல்லை என்றால் மலை உச்சியில் ஏறிக்கொண்டு வானத்தையும் பூமியை அளவெடுப்பான். அவனை ஒரு வினோத ஜந்துவாகதான் பார்த்தார்கள். அவ்வூர்மக்கள். ஆனாலும் அவனிடம் எதோ ஒரு அபூர்வ சக்தி இருப்பதாக மக்கள் நம்பிக்கொண்டிருந்தனர்.

அவன் பெயர் கூட எதோ கடுங்கோன்மேயன் என்கிறார்கள் அவனை அறியாத கிராம மக்கள். அது என்ன கடுங்கோன்மேயன்? ஆடு மேய்பவனோ இல்லை மாடு மேய்பவனோ யாருக்கு தெரியும்? அவன் ஆமையை மேய்த்தாலும் ஆனையை மேய்த்தாலும் இல்லை எந்த கழுதையை மேய்த்தாலும் யாருக்கு என்ன லாபம்? எழைகள் எங்குமே அடிமைகள்தானே. ஆனால் போக்கற்ற இந்த உலகத்தில் மிருகங்கள் மேய்க்கும் ஆயர்கள் தான் மதிகெட்ட மனிதர்களின் வாழ்வை வழிநடத்திக் கொண்டிருகின்றனர். அதனால்தான் சொல்கிறேன் இவன் யார் என்று யார் அறிவார்?

அதோ......ஆசிய கண்டத்தில் பாலஸ்தினம் சீனாய் மலை பள்ளத்தாக்கு. ஆசிய மைனரை கடந்து உலகை வெல்ல புறப்பட்ட மாவீரன் அலெஸ்சண்டரின் மாபெரும் குதிரை படைகள் இறுதியில் நடை தளர்ந்து தள்ளாடி கடந்து போன சுவடுகள் இந்த மண்ணிலே இன்னும் மிச்சம்மீதி ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது.

உலகத்தை வெல்லப் புறப்பட்டவர்களின் எத்தனை பேர்களின் உடல்கள் இந்த மண்ணிலே புதையுண்டுதான் போகிறது. உலகத்தை வென்று விடுகிறேன் என்று சவால் விட்ட மனிதர்கள் மரணத்தை மட்டும் வெல்ல முடிவதில்லை. மரணத்தை வெல்ல முடிந்தால் அவன் மனிதனாக போற்றப்படுவதில்லை. ஒரு மகானாக அல்லது யோகியாக, இல்லை இல்லை கடவுளாகத்தானே தென்படுவார்?

அந்த மலைச்சாரலில், பாறைகளோடு பாறைகளாய் தென்படும். ஒரு ஓலைக்குடிசை, அளவிலே சிறியது. அங்கங்கு கூரையில் தெரியும் ஓட்டையோ அதைவிட பெரியது. பரந்து விரிந்து கிடக்கும் பள்ளத்தாக்கில் கண்ணுக்கு எட்டிய தூரம் ஆள் அரவமற்றுகிடந்தது. அகண்ட இரசியாவின் இரவு குளிர் பனிக் காற்று எந்த ஆடைகளும் இல்லாமல் வந்து போகும். செம்மறி ஆடுகளின் தோல் அவனுக்கு போர்வைகளாயின. கொல்லும் குளிரும் சுட்டெரிக்கும் வெயிலையும் வெல்லும் திறன் படைத்தது அந்த நாடோடியின் வாழ்க்கை.
அமைதி பள்ளத்தாக்கில் அமைதியாய் காலம் தள்ளிக்கொண்டிருந்தான். தனிமையை நாடி அவன் வந்தானா இல்லை தனிமை அவனை நாடி வந்ததா என்று யாருக்கு தெரியும்? அவன் அங்கு எவ்வளவு காலம் அங்கு இருகின்றான் என்பது கூட யாருக்கும் தெரியவில்லை. மவுணங்கள் அவனுக்கு மணிமொழியாகின. கடவுளின் வார்த்தைகள் மட்டும் அங்கு எதிரொழித்துக்கொண்டிருந்தன. காற்று கனியும்தான் அவன் உண்ணும் உணவு. காணும் மழை நீர் அவனுக்கு குடிநீர்.

அந்த குன்றின் உச்சியில் இருந்து பார்த்தால் வானமும் கடலும் ஒன்றாக தெரிந்தன. என்ன இயற்கை விந்தை. இணைய முடியாத இருவேறு துருவங்கள் இங்கு இணைந்து கிடந்தன. எது வானம் எது கடல் என்று அறுதியிட்டு கூறமுடியாமல் நீர் நிலை தத்தளித்துக் கொண்டிருந்தது. அவனின் பார்வை கடலை நோக்கி வட்டமிட்டுக்கொண்டிருந்தது. எதை எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனோ?

யார் வரவை எதிர்ப்பார்த்துக்கொண்டிருகின்றனோ? யாருக்கு தெரியும்?
ரம்மியமான அந்த கடற்கரையில் எதோ ஏதோன்ஸ் ராஜியத்தின் பொற்காசுகளை அள்ளி தெறித்தார் போல ஜெக ஜோதியாய் மின்னிக்கொண்டிருந்தது அந்த நன்பகல் வேளையில். கடல் அலையோ தென்றல் போல வந்து வந்து தாலாட்டிச் சென்றது. எதோ ஒரு கறும்புள்ளி வானதில் இருந்து உதிர்த்து போல் அவன் கண்ணுக்கு தெரிந்தது. சற்று நேரத்தில் அசைந்துவந்த திருவாரூர் தேர் போல ஆடி வந்த அந்த படகு தரைதட்டி ஒதுங்கி நின்றது கடற்கரையோரம். படகில் இருந்து எழு எட்டுப்பேர் இறங்கி மலையின் உச்சியை நோக்கி நடக்க தொடங்கினர்.

அவர்களை வெறிக்க பார்த்துக்கொண்டிருந்த கடுங்கோன்மேயன் சிறு புன்னகையை உதிர்த்து அவன் குடிலுக்கு சென்று மவுணத்தில் அமர்ந்தான்.

எல்லைகள் இல்லா இந்த உலகில், தனக்கு ஏற்றார் போல எல்லையை வகுத்த மனிதன். காற்றுக்கு மட்டும் எல்லையை வகுக்க முடிகிறதா அவனுக்கு? தென்றலாக வரும் காற்று புயலாக மாறும் போது நாட்டின் எல்லைகளை வகுத்த மனிதன் அதனை தடுக்க முடிந்தா? மனித சக்திக்கு அற்பார்பட்ட ஒரு மாபெரும் இயற்கை சக்தியை அடைத்து வைக்கமுடிகிறதா? பொறி நோக்கி ஓடும் எலியை போல மனிதர்கள், இயற்கை என்னும் கழுகிடம் தப்பமுடியுமா? சுனாமியின் சூரத்தனங்களை கண்ட மனிதன் கொஞ்சமாவது அதற்கு தலைவணங்குகிரனோ என்றால் அதுவும் இல்லை. காலம் காலமாய் இயற்கை நமக்கு தரும் பாடங்களை கற்றுக்கொள்ள மறுக்கின்றோம். இல்லை இல்லை மடமையில் உழலுகின்றோம் என்றுதான் கூறவேண்டும். இயற்கை தரும் அருட் பேராற்றல் இனம் மதம் சாதி சமயம் மொழி என்று எதுவும் பார்பதில்லை எல்லைகள் இல்லா இந்த உலகில் மனிதன் மட்டும் அதற்கேல்லாம் எல்லைகளை வகுத்து மனித இனத்திற்கு தொல்லைகள் கொடுப்பது எதனால்?

மவுணம்தான் அறிவின் திறவுக்கோல் என்பதனால் கடுங்கோன்மேயன் வரும் நிகழ்வுகளை எதிர்ப்பார்த்து காத்திருப்பான் போலும். யார் இவன்? பாலை நிலத்திலே பகுத்தறிவு பகலவனா? இல்லை சித்துக்கள் செய்யும் பித்தனோ? அகிம்சையை போதிக்க நான்கு திக்கிலும் சென்ற புத்தனின் சீடனோ? யாருக்கு தெரியும்? இவன் யார் என்று?எவ்வளவு நேரம் அவன் கண்களை மூடி மவுணத்தில் இருந்திருப்பானோ தெரியவில்லை.அவன் கண்களை திறந்த போது அந்த படகோட்டி கும்பல் அவன் கண்முன் நின்றுக் கொண்டிருந்தனர். மவுணமாய் சிரிப்பை உதிர்த்தவன் கண்களால் கேள்விக்கணைகளை தொடுத்தான்.

இவனை நாடி வரும் இவர்கள் யார்? கடற்கொள்ளையர்களா? இல்லை பல நூற்றாண்டுக்கு முன் எட்டு திக்கிலும் சென்ற தமிழ் வணிகர்களோ. ரோம் சாம்ராஜியத்தில் வியபாரம் செய்து பொன்னும் மனியும் அள்ளிக்கொண்டு சென்ற தமிழ் நாட்டு வியபாரிகளா? எகிப்து நாட்டிலே பட்டும் பவளமும் முத்தும் விற்று அதை தங்கமும் வெள்ளியுமாய் பாய்மரக்கப்பலிலே ஏற்றிக் கொண்டு நடுக்கடலில் சுறவாலியில் சிக்கி முழ்கி சாலமான் சாம்ராஜியத்தில் அடைக்கலம் பெற்று நாடு திரும்பிய தென் பாண்டி முத்து வணிகர்களோ? யார் இவர்கள்? ஆதி காலத்தில் மறைந்த அந்த வணிகர்கள் இப்பொழுது எப்படி வரமுடியும்? அவர்கள் என்ன ஆவிகளா? இல்லை அடைகள் தரித்த யோகிகளா? யார் அறிவார்?

இதமான தென்றல் காற்று ஒரு விதமான மயக்கத்தை தந்துக்கொண்டிருந்தது அந்த மாலை வேளையில். சில்லிட்டு மேனியை சிலிர்க்கவிட்டு சென்ற அந்த மாலை மதிமயங்கு கடல் காற்று, அலைக்கடலோடு உரசி அவ்வப்போது ஓங்கரா ஓசையை எழுபியவண்ணம் இருந்தது.
அந்த குடில்லே மவுணத்தின் மறுபீடம் போல மயான அமைதியில் திளைத்திருந்தது. சித்தம் தெளிந்தவனாய் மறுபடியும் சிறு புன்னகையோடு வந்தவர்களை அமரச்சொல்லி சைகக்காட்டினான் கடுங்கரமேயன். மவுணச்சாமியாரா இவன், வார்த்தைகள் வர மறுக்கின்றனவே. இல்லை இல்லை நெடுங்காலமாய் உதிராத வார்த்தைகளால் அவனின் மவுணத்தை கலைக்க முடியவில்லையோ ?

இறுதியில் உதிர்ந்தது வார்த்தைகள். ஆறாடி உயரமுள்ள ஆஜாபாஜமான உடல்வாகு கொண்ட அந்த கடலோடிகளின் தலைவன் வாயிலிருந்து...... பகட்டான பட்டாடை , பளபளக்கும் பட்டு வேஷ்டி. பற்பல போர்களை கண்ட படை வீரனோ? உரம்மேரிய உடல் திறன் கொண்ட தோள்கள். நிறம் சற்று கருத்திருந்தது. சிறுபிராயத்தில் இருந்து துடுப்பை பிடித்து படகிலே உலகை வலம்வந்திருப்பனோ?

“அய்யனே! தங்களிடம் இந்த அடிமைகள் ஒரு உதவியை நாடி வந்திருக்கின்றோம். எங்களின் ஆதி பூமியான சிவபாத மலையை தேடி தேடி களைத்து போயிருக்கின்றோம்.. குமரி நாடு கடலிலே முழ்கியபோது எங்களின் பூர்வீகமும் பெரும் பொக்கிஷங்களும் கடலோடு கரைந்துபோயின. எங்கள் இன மக்கள் பல நாடுகளில் கரைகளில் ஒதுங்கி இன்று வேற்று இன மக்களாக உருவெடுத்திருக்கின்றனர். நாங்கள் கட்டி காத்த பண்பாடுகள் உயர் தொழில்நுட்பங்கள் ஒரு நெடியில் மறைந்து போனது. எங்களின் ஆதி மறைகள் கடலோடு கலந்து விட்டன. எங்களின் முன்னோர்களின் ஆன்மாக்கள் அழுதுக்கொண்டிருப்பதாகவும் அவர்களின் இருப்பிடங்கள் கடலிலே தத்தளிப்பதாகவும் எங்களின் குருமார்கள் கூறிக்கொண்டிருகின்றனர். அதற்காகத்தான் ஒரு பணிப்படையை உருவாக்கியிருகின்றோம். என் நண்பர்கள் அறிவில் சிறந்த சாண்றோர்கள். மதி நுட்பம் மிக்கவர்கள். எந்த சுழ்நிலையிலும் போரிடும் திறன் கொண்டவர்கள். அதனால்தான் தங்களின் உதவியை நாடி வந்திருகின்றோம். தாங்கள் ஒருவர் தான் அந்த இடத்திற்கு சென்று வந்தவர் என்பதால் அந்த பயண வரைப்படத்தை காட்டுமாறு வேண்டுகின்றோம்” என்று கூறி நிறுத்தினார்.

மறுபடியும் அவரே தொடர்ந்தார். “அய்யனே. நாங்கள் பயணப்பட்டு வெகு காலமாகிறது. தங்களை தேடியே சிலகாலம் கழிந்துவிட்டது.. எங்கள் தேசம் என்ன ஆனதோ.எங்கள் மக்கள் என்ன ஆனார்ககளோ என்று எங்களுக்கு தெரியவில்லை ஐயா ‘” . என்று சொல்லி கடுங்கோன்மேயனின் முகத்தை பார்த்தார்.

“ அஹஹஹ்ஹ்ஹா ஆஅஹாஅஹ்ஹ்ஹ்ஹா ஆஆஆஆ “ என்று பழம்பெரும் நடிகர் வீரப்பா ஜாடையில் பெரும் சிரிப்பை உதிர்த்தார் கடுங்கோன்மேயன். அந்த அமைதி சமவெளி சற்று நேரம் அதிர்ந்த ஒய்ந்தது. எதோ பெரும் புகம்பம் வெடித்து சிதறியது போன்று சற்று நேரத்தில் அமைதியானது அவ்விடம்.

யுகம் யுகமாய் சிரிக்காத முகம் போலும். இன்று சிரித்தவுடன் இந்த உலகம் சற்று நேரம் தன் இயக்கத்தை மறந்து விட்டதோ என்னவோ. கடுங்கரமேயோனிடம் இருந்து ஒரு வார்த்தை உதிர்ந்தது. “இது எந்த யுகம் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா?”

“இன்னும் சில காலத்தில் கலிக்காலம் கடக்க போகிறது. தமிழர்கள் காலக்காலத்தில் கருத்தோடு எதையும் செய்வதில்லை காலம் கடந்த பின் வருந்தி என்ன பயன்?” உலகை ஆளும் திறன் கொண்டவர்கள் இன்று அடிமை வாழ்வை ஏற்பது எதனால்? உணர்சிகளால் உந்தப்படுவதனால் அறிவின் திறன் மங்கிவிடுகிறது உங்களுக்கு” என்று அந்த கடலோடியின் தலைவனை பார்த்து சொன்னார்.

“அய்யனே! வாதிடுவதற்கு இது நேரமில்லை. செயல்படும் நேரம் இது. எங்கள் சமுகத்தில் புரையோடி கிடக்கும் பிரச்சனைகளை தீர்பதற்குதான் நாங்கள் திக்குவிஜயம் செய்துகொண்டிருக்கின்றோம். மூழ்கிக்கிடக்கும் எங்களின் மூன்னோர்களின் ஆதி நிலத்தை மீட்டு எங்கள் இனத்திற்கு இருக்கும் சாப விமோர்சனத்தை போக்குவதற்குத்தான் போராடிக்கொண்டிருகின்றோம். காலம் கடந்திருக்கிலாம். நாங்கள் களைத்தும் போய்யிருக்கலாம் ஆனால் கருமமே கண்ணாய் செயல் பட்டுக்கொண்டிருகின்றோம்”. என்று கடலோடியின் தலைவன் கூறினார்.

சிறு அமைதிக்கு பிறகு அந்த கடலோடியே மீண்டும் பேசினார். “அய்யனே தாங்கள் எங்களின் மூதாதயர்களின் வழித்தோன்றல்களில் ஒருவர். ஆழிப்பேரலையில் தப்பித்தவர்களில் தாங்கள் ஒருவர். எங்களின் இன்னல்களை. தாங்கள் அறியாததா? எங்களுக்கு வழிக்காட்டுங்கள் ஏன் இந்த மவுணம்?”

“எல்லாம் இறைவன் செயல். மற்றவை அனைத்தும் நாளை பேசுவோம் இன்று இங்கு உறங்கி ஓய்வெடுங்கள்” . அது கடுங்கோன்மேயனின் கட்டளையாக வெளிப்பட்டது.
இரவு உருண்டோடி வந்துக்கொண்டிருந்தது. நிலவு வானத்தில் வட்டமிட்டுக்கொண்டிருந்தது. அந்த மலைச்சாரலில் ஒரத்தில் பட்ட மரம் ஒன்று படர்ந்திருந்த கொடிகளின் துணையோடு தன் இருப்பை உறுதி செய்துக்கொண்டிருந்தது.
சில ஜாமங்களை கடந்தும் அங்கு எரியுட்டிக்கொண்டிருந்த விறகு குச்சிகளின் ஜுவாலையில் கனந்துக்கொண்டிருந்தது நெருப்பு. . குளிரும் இதமான வெட்ப்பமும் சேர்ந்து அவ்விடம் கதகதப்பாக இருந்தது.

மலைகுன்றின் உச்சியில் கடலோடியின் தலைவன் மட்டும் தென் கிழக்கு திசையை நோக்கி உற்றுப்பார்த்துகொண்டிருந்தான். தன் பயணப்படும் திசை அதுவாக இருக்குமோ என்று சிறு சந்தேகம் அவனுக்கு, தான் பயணபட்ட நாட்களை மறந்துவிட்டிருந்தான். எதோ சில யுகங்களை கடந்திருப்பது போன்று ஒரு பிரமை அவனுக்கு. தன் வாழ்க்கைப் பயணத்தில் கடந்து வந்த காட்டாறுகள் எத்தனை? கடந்து வந்த சாவல்கள் எத்தனை? இத்தனையும் கடந்து வந்து இந்த இடத்தில் நிற்பது ஒரு அதிசயம் என்றுதான் அவனுக்கு தோன்றியது.
மின்மினி பூச்சிபோல் வானத்தில் ஒரு நட்சத்திரம் தன்னை கண்சிமிட்டி அழைப்பது தோன்றியது. இடி இல்லை மழை இல்லை ஆனாலும் அந்த கார் இருட்டில் திசையை காட்டுவது போன்று ஒரு மின்னல் சட்டென்று தோன்றி தென் திசையை நோக்கி மறைந்தது. கடல் விலகி எதோ ஒரு பாதை அந்த சமுத்திரத்துகுள் மறைந்து கிடப்பது போல் அவன் கண்னுக்கு தெரிந்தது.

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

பெரும் படகு ஒன்று கடலை கிழித்துகொண்டு தென் திசையை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. அலைக்கடல் அமைதிக் கொண்டபாடில்லை. கரையைவிட்டு இரண்டு நாட்களை கடந்து விட்டிருந்தன. பார்வைப்படும் இடம் எல்லாம் ஒரே ஜலமயம்.எங்கும் அலைந்து திரிந்துக்கொண்டிருந்த கடவுளின் வார்த்தைகள் அங்கு காற்றாய் மிதந்துக்கொண்டிருந்தன.

தொடரும் கடவுளின் வார்த்தைகள் - 1