May 23, 2011

ஏன் தமிழ்? எதற்கு தமிழ்?
தமிழுக்கும் அமுதென்று பேர் ! .அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !
என்று சொன்ன கவிஞர் பாரதிதாசன் இன்று இருந்திருந்தால் கண்டிப்பாக ரத்தகண்னீர் வடித்திருப்பார், காரணம் தமிழர்களின் தமிழ்ப் பற்று அப்படி. தமிழர்கள் அன்று தொட்டு இன்றுவரை அறியாமை என்னும் ஆழிப்பெருங்கடலில் ஆழ்ந்துக் கிடக்கின்றனர்.

எங்கும் தமிழ், எல்லாம் தமிழ் என்று இருந்த நிலை மாறி எங்கே தமிழ் ? என்று வினா எழுப்பும் சுழ்நிலை இந்த தமிழ் சமுதாயத்தில் வளர்ந்துக்கொண்டிருக்கிறது. தமிழராக பிறந்து. தமிழ் மொழி பேசி, தமிழராக வாழும் தமிழர்கள். இன்று சிறுகச் சிறுகத் தமிழ் மொழி பயன்பாட்டையும் தமிழர் பண்பாட்டையும் சாகடிக்கவும் துணிந்துவிட்டனர் ஒரு சாரார். ஒரு சிலர் தமிழ் என்ன சோறா போடுகிறது? என்று வினா எழுப்புகின்றனர்.ஒரு சிலரின் அதிக பிரசங்கிதனமாக தமிழ் பள்ளியே தேவையே இல்லை என்னும் சொல்லும் அளவுக்கு அவர்களின் அதி மேதவிதனம் இருக்கிறது. தமிழ்ப் பள்ளி இருந்து என்ன பயன்? தமிழ்ப் பள்ளிகள், ஆட்டு மந்தைகளின் பிறப்பிடம், முட்டாள்களின் கூடாரம் என்று சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்.


அன்மையில் என் உறவினர் ஒருவரிடம் சமுதாய நடப்பை பற்றி பேசிக்கொண்டிருந்த போது, சில கருத்துக்கள் மிகவும் காரச்சாரமாக இருந்தது. மலேசிய தமிழர்களின் அறியாமையும், பண்பற்ற செயலையும், இங்குள்ள தமிழர்களின் குண்டர் கலாச்சாரம் தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளை எவ்வாறு பாதித்துள்ளன என்பதை ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தார். இன்றைய குண்டர் கும்பலை சார்ந்த தமிழ் இளைஞர்களின் அராஜகச் செயலையும் ஒழுக்க கேடான செயலையும் கூறி தமிழ்ப் பள்ளிகள் பண்பான மனிதர்களுக்கு பதில் தரங்கெட்ட மனிதர்களை இந்த தரணிக்கு தந்துக் கொண்டிருப்பது ஏன்? அப்படியானால் தமிழ் பள்ளிகளின் சமுக சேவைதான் என்ன? என்று கேள்விக் கணைகளை தொடுத்துக் கொண்டிருந்தார். இத்தனைக்கும் அவர் தமிழ் பள்ளியில் படித்து. சொந்த தொழில் தொடங்கி இன்று சமுதாயத்தில் ஒரு கோடிஸ்வராக மாறியிருக்கும் நாலும் தெரிந்த மனிதர். தன் இரண்டு பிள்ளைகளுக்கு தமிழ் புரியாது என்பதையும் அவர்களுக்கு தமிழ் தேவை இல்லை என்பதை கவரவுமாக கருதிக் கொண்டிருக்கின்றார். இந்த சமுதாயம் முற்போக்கு எண்ணம் கொண்டிருக்கிறதா இல்லை மடத்தனங்களால் பின்னப்பட்ட பிற்போக்கு எண்ணங்களால் ஆளப்படுகிறதா என்ற வினா எழுகிறது? ஏன் தமிழ் உணர்வுகள், தமிழன் என்ற உணர்ச்சிகள் இல்லாத தமிழர்களை இந்த சமுதாயம் ஈந்துக் கொண்டிருக்கின்றது? மலேசிய தமிழ் சமுதாயம் மட்டும் அல்ல, இந்திய தமிழ்ச் சமுகமும். உலக தமிழ் இனமும் தமிழ் உணர்வுகள் அற்று வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.

தமிழர்களின் பண்பாடுகளை பற்றியும் தமிழர் குண நலன்களைப்பற்றி பேச யாருக்கு தகுதி உண்டு? தமிழர்களின் நல்ல பண்புக்கூறுகளை இத்தரணியில் தலைச்சிறந்தது என்பதை எத்தனையோ பண்பாளர்கள், தமிழ்ச் சான்றோர்கள் உதாரணமாக இருந்திருக்கின்றார்கள், இருக்கின்றார்கள். நம் முன்னோர்கள் நெடுங்காலமாக அறநெறியில் வாழ்ந்து, அன்பே தெய்வம் அன்பே சிவம் என அளித்த தமிழ்ப்பண்பாடே அதற்குக் காரணம். அதனால்தான் தமிழ் இனம் இன்னும் அழியாமல் வாழ்கிறது.

தமிழர்களின் வீரம், மானம், தியாகம் எல்லாம் தவறாக நெறிப்படுதப்பெறுகின்றன. தமிழ் அறிஞர்களின் அறவுரையும் அறிவுரைகளும் இன்றைய தமிழர்கள் கேட்பாரில்லை. தமிழர் பண்புகளை நல்வழிப்படுத்த நல்ல தகமைமிக்கத் தலைவர்களை இல்லை. நல்ல களமும் தளமும் இல்லை. அதனால்தான் தமிழர்களின் சிறு குறைகள் கூட பெரும் குற்றங்களாக கடிந்துரைக்கப்படுகின்றன. மொழியையும் பண்பாடுகளை மறப்பனால் இந்த சமுதாயம் சாகடிக்கப்படும் என்பதை நம் இனத்தமிழர்கள் உணரவேண்டும்.

தமிழர்கள் தமிழ்ச் சமுதாயத்தை பற்றி கேள்வி எழுப்புகிறார்கள் அதில் ஒன்றும் தவறில்லை. கேள்விக்கணைகளை தொடுத்து தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள் அதை ஏற்றுக் கொள்வோம். ஆனால் ஒரு சில தமிழர்கள் தன் பிள்ளைகளின் பெயரையே மாற்றிக் கொண்டு திரிகிறார்கள். முன்பெல்லாம் வட மொழிப் பெயர்களை வைத்தார்கள் .சமய அடிப்படையில் அதை ஏற்றுக் கொண்டோம். தமிழர்களுக்கு தமிழே பெயர் வையுங்கள். அதுவும் தூய தமிழ்ப் பெயர் சூட்டுங்கள் என்று நாம் தனித்தமிழ் இயக்கம் வைத்து போராடிக் கொண்டிருக்கும் போது அந்தோ பாவம்! பெரும் தவறாக இப்பொழுது தமிழர்கள் வேற்று மொழி சார்ந்த சாதி அமைப்புக்களின் பெயர்களை தன் மகனுக்கும் மகளுக்கும் நாமமாக சூட்டுவது எவ்வளவு பெரிய அறியாமை என்பதை விட எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று இந்த தமிழர்கள் உணர்ந்தார்களா? இது துரோகத்தனத்தை விட கீழ்த்தரமான செயல் என்பதை இந்த படித்த தமிழர்களுக்கு ஏன் புரியவில்லை? இது ஒரு ஆச்சிரியமான விடயமாகத்தான் உங்களுக்கு படும் ஆனால் உண்மை அதுதான். சாதிப் பெயர்களே வேண்டாம் என்று நாம் தமிழ்ச்சான்றோர்கள் சொல்லும் போது இவர்கள் என்னவென்றால் மற்ற இனத்தவர்களின் சாதி பெயர்களை தன் பிள்ளைக்கு சூட்டுவது எங்கனம் நியாயம்?

தமிழன் என்று தன்னை அடையாளப்படுத்தக் கூட இன்றைய தமிழர்கள் முன்வருவதில்லை. தமிழன் தாழ்ந்தவன். மற்றோர் எல்லாம் உயர்ந்தோரா? சில தமிழர்கள் சற்று சிவத்த மேனியில் இருந்து விட்டால் தான் மலையாள கலப்பு அல்லது தெலுங்கு கலப்பு என்று பறைச்சாற்றுகின்றனர். இனக் கலப்போ இல்லை மொழிக் கலப்போ வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று அல்ல. வரவேற்கத்தக்க செயல்தான். இருப்பினும் கலப்புறும் தமிழர்கள் தன்னுடைய தமிழ் கலச்சாரத்தை நிலை நிறுத்த வேண்டிய கடமையை மறுக்கலாமா? மற்ற இனக் மொழி கலப்புக்களை வரவேற்கும் தமிழர்கள் தன் தமிழ் இனம் மற்ற தமிழ் குழுக்களோடு கலப்பற்கும் ஒரே தமிழ் இனமாக உருவெடுப்பதற்கும் சாதிகளை காரணங்களை காட்டி மறுப்பது எதனால்?

மலாய் இனம் மென்மையுறுவதற்கு மலேசிய நாட்டிலே பல காரணங்கள் இருந்தாலும் அதிலே மிகவும் முக்கியமான விடயம் என்னவென்றால் கலப்பு மனம். மற்ற இனம் தன் இனத்தோடு கலப்புறுவதற்கு அவர்கள் இசைகிறார்கள். ஒரு மலாய் இனம் அல்லாதவர் ஒரு மலாய் பெண்யோ அல்லது ஒரு ஆணையோ திருமணம் செய்யும் போது அவர் கண்டிப்பாக இஸ்லாமியாராக மாறவேண்டும். மலாய் கலச்சாரத்தை பின்பறவேண்டும் என்பதை வழியுறுத்துகிறார்கள். அல்லது கட்டயாப்படுத்துகிறார்கள். நாளடைவில் அவர் மலாய் இனத்தோடு கலப்புற்று தன் முந்தைய சமுதாய அமைப்பில் இருந்து தொலைந்து போகுகிறார். நாடு சுகந்திரம் பெறும் முன் மலாய் இனம் 51 சாதவிதம் தான். இன்று 64 சாதவிதம். மலாய் இனமக்கள் தொகை பெருக்கத்திற்கு அவர்களுடைய கலைக்கலச்சாரத்தை பேணிக்காப்பதும் ஒரு காரணம்தான். ஆனால் நாம் என்ன செய்கிறோம்? நமது பண்பாடுகளை தொலைத்துக் கொண்டு நிற்கிறோம். சுகந்திரத்திற்கு முன் 12 சாதவிதம் மக்கட் தொகை கொண்ட நாம் இன்று 7 சாதவிதம்தான். எங்கே தொலைந்தோம்? எப்படி தொலைந்தோம்?

என் சொந்த கிராமத்தை சார்ந்த ஒரு நண்பரை அன்மையில் கிள்ளான் வட்டாரத்தில் சந்தித்தேன். இங்கேயே செட்டில் ஆகிவிட்ட அவர் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றார். அவருடைய பிள்ளைகளின் பெயரை கேட்டவுடன் என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. தன் பிள்ளைக்கு வட நாட்டை சார்ந்த ஜாதி பெயரை தன் மகனின் பெயரோடு இனைத்து வைத்திருக்கின்றார். இவர் இனமோ தமிழ் இனம். தாய் மொழியோ தமிழ் மொழி. எனக்கு நன்றாக தெரிந்த ஒரு நண்பர். தமிழ்ப் பள்ளியில் படித்த மாணவர். நல்ல தமிழிலே உறவாட கூடிய நண்பர் அவருக்கு ஏன் இந்த அறியாமை? ஏன் என்று கேட்டேன். தமிழன் என்றால் எவன் மதிக்கிறான்? அதற்காக இப்படியா? தன் சாதி போர்வையை நீக்கவேண்டி மற்றவர்களின் முகம் தெரியாத சாதி போர்வையை போர்த்திக் கொள்ளவேண்டிய அவசியம் என்ன? அதைவிட தூயத் தமிழிலே பெயர் வைத்தால் இவர்களின் மானமும் ரோசமும் குறைந்தா போய்விடும்? அவரைச் சொல்லியும் குற்றமில்லை. சாதிக்காக மதத்தை மாற்றுவது போல் சாதிக்காக இனத்தை மாற்ற முயற்சிக்கிறார் போலும். இதுவும் சாதி மத துவேசத்தில் எழும் தமிழ் இன பற்று அற்ற ஒரு நிலைதான். தன்னலம் மிக்க தமிழர்கள் எப்போழுது தன் இனத்தைப்பற்றி சிந்தித்திருக்கின்றார்கள்?

ஒரு காலத்தில் தமிழ்ச் சிந்தனையும், தமிழர் வாழ்வையும் உணர்த்தவும் காக்கவும், வளர்க்கவும், வாழ்வித்துப் பரப்பவும் எப்படி திருவள்ளுவரும், இளங்கோவும், கபிலர், பரணர், கணியன் பூங்குன்றன், ஓளவையார் போன்ற சங்க புலவர்களும் என்னற்ற தமிழ்ச் சான்றோர்கள் முயன்றார்களே அதே போல் நவீன யுகத்திலும் என்னற்ற அறிஞர்கள் தமிழுக்காக போராடினார்களே அவர்களை போல் அவர்களின் உணர்வுகளை பெற்று நாமும் போராட வேண்டும். தமிழ் இன, மொழி உணர்வை தீ மூட்டி அக்கினி பிழப்பாக உலகை வலம் வர செய்வோம். தமிழன் என்றவுடன் தலை நிமிரச் செய்வோம். குறைகளை மட்டும் சொல்லிக் கொண்டிருந்தால் தமிழன் உயர்ந்து விட மாட்டான். நிறைகளைச் சொல்லி தமிழர் பண்பாடு இதுதான். இப்படிதான் வாழவேண்டும் என்று தமிழர் பெருமைகளைச் சொல்லி வாழ வழி சமைப்போம். தமிழர்களின் மொழி, இன, கலைச்கலாச்சாரத்தை கட்டி காப்போம். நமது கடமை அதுவென்று முழங்குவோம்.
Post a Comment