October 13, 2010

கூட்டம்
“வானகமே! வையகமே வளர்ந்து வரும் தாயகமே,” என்று அந்த கூட்டத்திலே முழங்கிக் கொண்டிருந்தார் சாம்பசிவம். “நணபர்களே ! இது கலைஞர் கருணாநிதி எழுதிய திரைக்கதை வசனம் அல்ல, இந்த மலேசியா நாட்டிலே பிறந்து வளர்ந்து இறுதி மூச்சை இந்த மண்ணிலே புதைத்துவிட்டு செல்லும் எம்மின மக்களுக்காக என் நெஞ்சிலே எழும் ஏக்க உணர்வுகளால் எழுந்ததை உரைத்தேன். ஏதோ வாழ்ந்தோம் செத்தோம் என்று இல்லாமல் நமக்காக நாம் போராடத்தான் வேண்டும்” என்று சொல்லி கூட்டத்தினரை பார்த்து மீண்டும் தொடர்ந்தார் சாம்பசிவம்.

“நண்பர்களே ! நெஞ்சிலே உரம் உண்டு நேர்மை திறன் உண்டு. நமக்கு இங்கு வாழ்க்கையா இல்லை? நம்மைப் பார்த்தா வந்தேரிகள் என்பது? காடு வெட்டி கழனியை கண்டவர்கள் நாம். பெரும் காடாய் இருந்த நிலத்தை நாடாக மாற்றிக்காட்டியவர்கள் நம் சந்ததியர். இருண்ட காட்டுக்குள் புகுந்து செம்மண் சாலைகளையும் தார் சாலைகளையும் போட்டு கூலிக்கு மாரடித்த கூட்டம் ஐயா நம் தமிழர்கள் கூட்டம்.”

எள்ளும் கொள்ளும் வெடித்தது அங்கு குமிழ்ந்திருந்த மக்கள் கூட்டத்தின் முகத்திலே. உணர்ச்சி பெருக்கம் சிலர் முகத்திலே கருக் கொண்டிருந்தது. சிலரின் முகம் இறுகிக்கொண்டிருந்தது. சிலரின் முகத்திலே கலக்கம் தெரிந்தது.

அப்பவே என் தாத்தா சொன்னாரு

“ ஊருக்கு போனாவது கஞ்சியாவது குடித்து வாழ்ந்துக்கலாம். இங்க தினம் தினம் என்ன நடக்கும் ஏது நடக்கும் என்று தெரியாமல் செத்துக் கொண்டிருக்கின்றோம்”. கூட்டத்தில் இருந்து ஒருவரின் குரல் தீர்க்கமாய் ஒலித்தது.

“கஞ்சி குடித்து வாழ்வதற்காகவா நமது முன்னோர்கள் கடல் கடந்து வந்து காட்டை அழித்து காட்டிலே கொசுக்கடிக்கும் பாம்புக்கடிக்கும்,புலி, சிங்கம், கரடிகளுக்கு முகம் கொடுத்து போராடினார்கள்? எவ்வளவு துயரங்கள் துன்பங்களிருந்து மீண்டு இருப்பார்கள்? இன்று நம் கொஞ்சமாவது நன்றாக வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம் என்றால் அவர்களின் தியாகமும் உழைப்பும் தான். உயிரைக்கொடுத்து உழைத்து இந்த நாட்டை செல்வ வளம் கொழிக்கும் நாடக்கிய பெருமை நமக்கும் உண்டு நண்பர்களே. இந்த சொர்க்க பூமியில் வசதியாக வாழ நமக்கும் உரிமை உண்டு. நாம் ஏன் மற்றவர்களுக்கு பயப்பட வேண்டும்? நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்காகதானே நாம் இங்கு கூடி இருக்கின்றோம். உண்மைகளை பேசுங்கள் உரிமைகளை நிலை நாட்டுங்கள் வம்பு வழக்கு எல்லாம் நமக்கு வேண்டாம். சிந்தனை திறன் கொண்டு சீரிய வாழ்வை அமைத்துக் கொள்வோம்..அன்பர்களே”. என்று கூறி முடித்தார் சாம்பசிவம்.

மக்கள் தலைவர் சாம்பசிவம் ஓர் இன்முகத்தோடு சமூக சேவையாற்றுபவர். கருத்த நிழல் அவர் முகம். கண்களிலே ஒளி. எப்பொழுது சிரித்த முகத்தோடு பவனி வந்து பலரின் பிரச்சனைகளை கேட்டு அதற்கு தக்க நடவடிக்கையை எடுத்து மக்கள் நலமே மகேசன் நலம் என்று பலருக்கு உதவும் நல்ல மனம் படைத்த ஒரு பொதுநலத் தொண்டர். ஒரு அரசியல் மன்றத்தின் தலைவரும் கூட. சிறிது காலமாக அவர் மனதில் ஒரு வர்க்க போராட்டமே எழுந்து அவரின் மனதை அலைக்களித்துக் கொண்டிருக்கிறது. நாட்டின் நடப்பும் அவ்வளவு சரியில்லாத சூழ்நிலை. மக்கள் மனதினிலே ஒரு தெளிவை கொண்டு வரவேண்டும் என்ற நோக்கினிலே இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார் சாம்பசிவம்.

மக்கள் கூட்டம் என்னவோ அதிகமாகத்தான் இருந்தது. படித்தவர்களும் பாமர மக்களும் திரண்டிருந்த அந்த கூட்டத்தில் உணர்ச்சி வயப்பட்ட மக்கள் கூட்டத்தை கட்டுக்குள் கொண்டுவருவது என்பது எல்லோருக்கும் சாத்திய படாதுதான். அதிலும் தமிழர்கள் கூட்டம் என்றாலே சொல்லவே வேண்டாம். எப்பொழுதும் இரண்டாம் கெட்ட நிலைதான். ஒருவர் ஆம் என்றால் மற்றொருவர் இல்லை என்பவர்தான் அதிகம். ஒற்றுமையின் சின்னமாச்சே நமது சமுதாயம் .எப்பவும் இரண்டு கோஷ்டியோடு எதிரும் புதிருமாக இருப்பார்கள்.இல்லை என்றால் அடிதடியில் இறங்கி கோதாவை நொருக்கி தள்ளிவிடுவார்கள். இவர்களை வைத்து எதைத்தான் சாதிக்க முடியும்? என்ற பயத்துடனே இந்த கூட்டத்தை ஆரம்பித்து விட்டார் நண்பர் சாம்பசிவம்.

ஏற்கனவே சூடுப்பட்ட பூனை. சில பிரச்சனைகளில் மூக்கை நுழைத்து அடி வாங்காத குறை. எதையும் திறந்த மனதுடன் பேசும் சாம்பசிவம் ஒளிமறைவற்ற ஒரு உன்னத மனிதர். வருங்காலத்தை சில பிணக்குகளுடன் கணக்கு பார்த்து கூட்டி கழித்து கணக்கு இப்படி தான் வரும் என்று சொல்லும் இயல்பினர்.

“கூட்டிக் கழித்து பாரு எல்லாம் சாரியா இருக்கும்”

என்று சொல்லும் மகா தத்துவத்திற்கு அவ்வப்பொழுது ஆராய்ச்சி மணி அடிப்பவர்.
நேரம் போக போக மக்கள் கூட்டம் இன்னும் அதிகமாக கூடிக் கொண்டிருந்தது. மேலே ஓடிக் கொண்டிருந்த காற்றாடி இன்னும் அதிவேகமாக சுழன்றுக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டார் சாம்பசிவம். மக்கள் அதிகமாக அதிகமாக புழுக்கம் அதிகரித்துக் கொண்டிருந்தது. நண்பர் சாம்பசிவம் கூட்டத்தை தொடர்ந்து கொண்டிருந்தார்.

ஒரு வயோதியர் எழுந்து,

“ ஜப்பான்காரன் வந்து நம்ம ஜனங்களை வாரிக் கொண்டு போய் மரண ரயில்வேனு சொல்லி இரண்டு லச்சம் தமிழர்களை கொன்று விட்டான்.

நேதாஜி வந்து சுதந்திர இந்தியானு சொல்லி இங்குள்ள தமிழர்களின் உணர்சிகளை ஏற்றி எத்தனை லச்சம் தமிழ் மக்களை இழந்தோம்? உணர்ச்சி படுவது தானே தமிழனின் வேலை.
ஜப்பான்காரனுக்கு பிறகு காட்டுக்காரனுக்கிட்ட மாட்டிக்கிட்டு எவ்வளவு மக்களை இழந்திருகின்றோம்?

மலாயா விடுதலை அடைஞ்ச பிறகு எத்தனை தமிழர்களை பிரிடிஷ்காரன் கப்பல் ஏற்றி இந்தியா என் தாய் நாடுனு சொல்லி எவ்வளவு தமிழர்களை அனுப்பி வைச்சுட்டான். இப்ப இருப்பதோ கொஞ்சம் நஞ்ஞம் மக்கள் தான் இவங்களை வைத்து என்னத்த போராடுவது?” என்று அந்த கிழவர் கேள்விக் கணைகளை தொடுத்தார்.

மக்கள் கூட்டத்திலே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். வியர்வைகளின் மத்தியில் சிலர் கைக்குட்டையை வைத்து முகத்தை துடைத்துக் கொண்டனர். சிலர் வழிந்துக் கொண்டிருந்த வேர்வை துளிகளை வழித்து தரையில் விட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆம், நாம் இருப்பதோ சிறு பான்மை இனம் அதற்காக நமது உரிமைகளை விட்டு கொடுத்து விடமுடியுமா என்ன? நமது போராட்டத்தின் அடித்தளமே மக்கள் ஒற்றுமைதான். ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு ஐயா. கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா என்ன? நமது உரிமைகளை கேட்போம் சலுகைகளை பெருவோம். என்று சொல்லி முடித்தவுடன்
“சலுகைகளை பெருவதா? பேசமா அவன் காலுல விழுந்துவிட வேண்டியது.. ஐய்யா சாமி என்று அவன் காலிலே கையிலே விழுந்து நமக்கு வேண்டியதை பெற்றுக் கொள்வோம்”
கூட்டத்திலே ஒரே சலசலப்பு. ஒரு கரடுமுரடான குரல் எதிரொலித்தது. வாட்டசாட்டமான ஆள். என்ன இது கூட்டம் சூடு பிடிக்கும் போல் அல்லவா இருக்கிறது.

நமது உரிமைகளை நாம் பெறுவோம் எவன் காலிலும் விழவேண்டாம். இண்ராப் மாதிரி நாமும் துணிந்தால் எதற்கும் வழி பிறக்கும் என்றார் அந்த முரட்டு பேர்வழி.

உண்மைதான் இண்ராப் காலக்கட்டத்தில் நமது உரிமைகளை எடுத்து சொல்வதற்கு சரியான வழிமுறைகள் இல்லை. இப்பொழுது அதற்கான கதவுகள் திறந்து கிடக்கின்றன. முரட்டுத்தனம் சில சமயங்களில் நமக்கு தேவையான ஒன்றாக இருக்கிறது. பிரிதொரு சமயங்களில் அதுவே நமக்கு முட்டுக்கட்டையாகவும் மாறிவிடுகின்றன..அறிவு நிலையில் இருந்து எதற்கும் நீர்வு காணலாம். உணர்ச்சி வையப்பட்டு எடுக்கும் எந்த ஒரு முடிவும் சரியான முடிவாக இருக்க முடியாது. உரிமைகளையும் சலுகைகளையும் போராடித்தான் பெறவேண்டும் என்பதில்லை. பேசி தீர்த்தால் பல மத இன உணர்வுகளை நாம் கட்டுப்படுத்தலாம் என்று முதல் வரிசையில் அமர்ந்திருந்த எனது நண்பர் இரவி எழுந்து நின்று ஒரு விரிவுரையே நடத்திவிட்டார்..

“அரசாங்கம் இதுவரைக்கும் நமக்கு நல்லதுதானே செய்திருக்கு. சில விசயங்களை நாம் கேட்டு வாங்க தவறியிருக்கின்றோம். சில தலைவர்களை நம்பி ஏமாந்து விட்டோம். யார் யாரை நம்பினோமே அவர்கள் எல்லாம் நம்மை ஏமாற்றி விட்டார்கள். நாமும் உறுதியான குரலில் நமது உரிமைகளை சொல்லி இருக்க வேண்டும்.”

சமுதாயத்தில் நல்லவர் என்ற பெயர் எடுத்தவர் நண்பர் இரவி, அமைதியான குணம், அன்பான பேச்சு, சமுதாய பற்றும் கொண்டவர், ஒரு சிறந்த தொழில் அதிபரும் கூட. வாழ்க்கையில் தான்னுடைய முன்னேற்றம் மட்டும் போதாது. மற்றவர்களும் முன்னேற வேண்டும் என்று பாடுபடுபர்வர்தான் இந்த இரவி. எந்த பேச்சும் தீர்க்க தரிசனமாய் இருக்கும். யோக தரிசன மன்றத்திலே நடப்பு காரியதரிசி, செயல் திறன் கொண்டவர். சாம்பவசிவத்தின் அழைப்பை ஏற்று இந்த கூட்டத்திற்கு வந்தவர். தன்னுடைய பேச்சை தொடர்ந்தார்.

“நான் சொல்வதை கேளுங்கள்” மீண்டும் சற்று குரலை உயர்த்தி “நான் சொல்வதை சற்று காது கொடுத்து கேளுங்கள்” என்று சொல்லி நிறுத்தினார்.

இந்த விசயத்தில் நாம் உணர்ச்சி பூர்வமாக முடிவு எடுப்பதை முதலிலே நிறுத்தவும். அறிவுச் சார்ந்த விசயங்களை சற்று ஆராய்ந்து முடிவு எடுப்பது சாலச் சிறந்தாக இருக்கும். என்பது என் முடிவு. என்று சொல்லி கூட்டத்தினரை பார்த்தார்.

நாம் சிறுபான்மை சமுகம் தான், ஆனால் சாதனைகளை படைத்த சமுதாயம். நமது அறிவு திறனும் ஆன்மா பலமும் ஒன்றுப்பட்டால் இந்த உலகிலே நம்மை போல ஒரு சிறந்த இனம் இல்லை என்பார்கள். ஒன்றுபட்டு சரித்திரத்தை புரட்டி போட்ட வரலாறு நமக்கு உண்டு. கடல் கடந்து நாட்டை வென்றவர்கள் தமிழர்கள். இன்றைய மலேசியா நாட்டிலே பெரும் செல்வந்தர்களில் மலேசிய தமிழர்களும் உள்ளனர். ஆனால் என்ன அவர்கள் சிறு எண்ணிக்கை அவ்வளவுதான்.

அதற்குள் ஒரு நண்பர் எழுந்து நின்று. ம்ம்ம்ம்ம்ம்.......... நீங்கள் சொல்வது நல்லாதான் இருக்கு. தமிழன் தமிழன் என்று நாம் சொல்லலாம் ஆனா வாழ்க்கையில் உயர்ந்த தமிழர்கள் அடிமட்டத்தில் இருக்கும் தமிழனுக்கு உதவ மறுக்கும் போது எப்படி தமிழனின் ஒற்றுமையை பற்றி நாம் பேசமுடியும்? கொஞ்சம் உயர்ந்தவுடன் மற்ற தமிழர்களை ஏளன பார்வையுடன் பார்க்கும் தமிழன் தான் நமது நாட்டிலே மிகவும் அதிகம். இவர்களுக்குள்ளே நூறு சாதி. தமிழன் தடுக்கி விழுந்தாலும் சாதி சாக்கடையில் தானே விழுறான். பிறகு எப்படி ஒற்றுமையாக இருக்க முடியும்? தமிழன் என்று சொல்லுராங்க ஆனால் அந்த தமிழன் தான் நமக்கு “ஆப்பு” வைக்கரானுங்க. என்று சொல்லி கூட்டத்தை ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்து அமர்ந்துக் கொண்டார்.

கூட்டத்திலே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்.அங்கு சுழன்றுக்கொண்டிருந்த காற்றாடி அனைவரின் எண்ணங்களை போல மிகவும் வேகமாக சுழன்றுக் கொண்டிருந்தது.
ஒவ்வொருவரின் முகத்திலும் வியர்வை துளிகள் முத்து முத்தாக வடிந்துக் கொண்டிருந்தது. காற்றின் அழுத்தமா இல்லை அவர்களின் மன அழுத்தமா என்று புரியவில்லை. எங்கும் வெப்பக் காற்று சுழன்றுக் கொண்டிருந்தது அங்கு குழுமி இருந்த தமிழர்களின் மனம் போல்.

மக்கள் தலைவர் சாம்பசிவம் மீண்டும் ஒலிபெருக்கியை பிடித்து நண்பர்களே! நீங்கள் சொல்வது சரியாகக் கூட இருக்கலாம் ஆனால் தமிழனின் பெருமையை தெரியாதவர்கள் மற்றொரு தமிழனை மட்டம் தட்டுவார்கள். உண்மையை உணர்ந்தவர்கள் தமிழன் என்ற உணர்வுடன் வாழத்தான் ஆசைப்படுகின்றார்கள்.

ஆனந்த கிருஸ்ணன் தமிழர்களின் பெருமைக்கு நல்ல எடுத்துக் காட்டுதானே. இரட்டை கோபுரம் அவரின் பெருமைக்கு சான்றுதானே. தொலைத் தொடர்பு தகவல் சாதனத்தை விண்ணிலே ஏவிய பெருமை அவருக்கும் உண்டு ..அது தமிழனுக்கும் பெருமைதானே. அவ்வளவு ஏனப்பா ஏர் ஆசியா தோனி பெர்னண்டெஸ் நஷ்டத்தில் இயங்கிய நிறுவனத்தை இன்று உலகிலே தலைச் சிறந்த ஒரு நிறுவனமாக மாற்றிக் காட்டி பெருமை நமக்கும் இருக்கிறதுதானே.

நம்மால் முடியாதது எதுவும் இல்லை முயன்றால் எதுவும் திருவினையாகும்..நாம் யார் காலிலும் விழவேண்டிய அவசியம் இல்லை முயற்சி முயச்சி அது பயற்சியாய் ஆக்கிக் கொண்டால் எவன் உதவியும் நமக்கு தேவையில்லை. அவன் அதை கொடுப்பானா? இவன் இதைக் கொடுப்பானா? என்று ஏங்கிக் காலத்தை கழித்துக் கொண்டிருக்க வேண்டிய தேவையும் இல்ல அவசியமும் இல்லை.

கூட்டத்தில் எழுந்த இன்னொரு முதியவர் “சரியா! உங்க பேச்சுக்கே வரேன். ஆனா போற போக்கிலப் பார்த்தா பிரச்சனைகள் உருவாகும் போல இருக்கு இதுக்கு நீங்க என்ன சொல்லுறீங்க?”

உணர்ச்சி பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்த ஒரு சிலரின் முகத்தில் ஒரு வகையான கலக்கம் ஐயோ இது என்ன நம்பல நிம்மதியா வாழ விடமாட்டனுங்க போல இருக்கு என்று ஒரு சில முனுமுனுத்துக் கொண்டிருந்தனர். ஏதாவது நடந்தால் நாம் எல்லாம் எங்கே போவது?

மரம் வைத்தவன் தண்ணீர் ஊத்தாமலா போவான்? கடவுள் நமக்கும் ஒரு வழிக் காட்டாமலா இருப்பாரு? மாரியாத்தா நம்ப மனசுக்கு நல்ல படியாகத்தான் படி அளப்பாள். ஒரு தாய்குலத்தின் பிரார்த்தனை.

மீண்டும் அதே குரல் அந்த கரடுமுரடான மனிதரிடமிருந்து “ மாற்றதிற்குதான் நாம் போராட வேண்டுமா? நம்மை நாமே காப்பதற்கு இந்த பூமியிலே போராடிக் கொண்டுதானே இருக்கின்றோம். தமிழனுக்கு போராட்டமே வாழ்க்கையா போச்சு..மற்றவர்கள் நம்மை காப்பதானுனு நினைச்ச அதை விட முட்டாள் தனம் வேறு எதுவும் இல்லை. முதலிலே நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.” .

அதை நான் ஆமோதிகின்றேன் என்று சொல்லி மக்கள் தலைவர் சாம்பசிவம் ,“இந்த சமுதாயத்திற்காக ஒரு செயல் திட்டம் வரைந்தே ஆகவேண்டும். அந்த திட்டதின் வழி சமுதாய வளர்ச்சி மட்டும் அல்ல, சமுதாய பாதுக்காப்புக்காகவும் ஒரு செயல் திட்டம் வேண்டும். அதை அரசாங்கத்திடம் நாம் வலியுறுத்த வேண்டும்.” என்று சொல்லி முடிப்பதற்குள் கூட்டத்திலே சலசலப்பு..

நான்கு ஐந்து காவல்துறை அதிகாரிகள் மண்டபதிற்குள்ளே நுழைந்து மேடையை நோக்கி, பேசிக் கொண்டிருந்த மக்கள் தலைவர் சாம்பசிவத்திடம் ஏதோ கேட்டுக் கொண்டிருதார்கள். இந்த கூட்டத்திற்கு நீங்கள் வாங்கிய அனுமதியை காவல்துறை மீட்டுக் கொண்டுவிட்டது. கூட்டம் அப்படியே கலைந்து செல்ல வேண்டும் என்று உயர் காவல் அதிகாரியான ஒரு தமிழர் உறுமிக் கொண்டிருந்தார்.

கூட்டம் கலவரப்பட்டுக் கொண்டிருந்தது. கூட்ட நெரிச்சலில் எங்கோ ஒரு மூலையில் நண்பர் இரவி விழி பிதுங்கி மாட்டிக்கொண்டார். சாம்பசிவம் எவ்வளவோ மன்றாடியும் அந்த உயர் அதிகாரி மனம் இரங்கவில்லை. இரண்டு காவல் அதிகாரிகள் மக்கள் தலைவர் சாம்பசிவத்தை தரதரவென்று இழுத்து சென்றுக் கொண்டிருந்தனர். அவரின் மூக்கு கண்ணாடி விழுந்து நொறுங்கி கிடந்தது. அவரின் ஒருகால் கிழிந்த செருப்பு மேடையை நோக்கி அவர் இல்லாத வெறுமையை எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.
Post a Comment