August 8, 2010

மனக்கதவுகள் நனைகின்றன.
நிஜங்கள் அன்று வெளுத்து கொண்டிருந்தது வானத்தை போல, ஒளியின் சிதறல்கள் பூமி எங்கும் படர்ந்து கிடந்தது. இருளுக்கு பின் மறைந்து கிடக்கும் விழியைப்போல மனதின் ஓரத்தில் ஏதோ மின்னல் கீற்றாய் ஒளிப்பட்டு இதய பூமி எங்கும் குளிர்ந்த காற்றால் என் நாடி நரம்புகள் எங்கும் வியப்பித்து கிடந்தன.

அடைமழை விட்ட பிறகும் என் மனம் அமைதி கொள்ள மறுத்தது. மழைத் தூறலின் சாரலில் இருந்து விடுப்பட முடியாமல் அடம்பிடித்துக்கொண்டிருந்த மனக்கோலங்கள் மெளன ராகமாய் மழைத்துளியில் நனைந்துக் கொண்டிருந்தன.

அடர்ந்த காட்டில் கடந்து போகும் மேகக்கூட்டங்களைப் போல் இருண்ட மனத்திரையில் திரண்டு நிற்கும் சோக கீதங்களாய் மறைந்து நிற்கும் உள்ளக்கதவுகள் என் வீட்டின் வெளியே சுருங்கி நின்றன.

விழியின் ஓரத்தில் வீழ்ந்து கிடந்த கண்ணீர் துளிகளை துடைத்துக் கொண்டு வீதியின் ஓரமாய் பார்வை சென்றது. படர்ந்திருந்த மழை நீர் வெள்ளக்காடாய் தெருவெங்கும் நிறைந்திருந்தன. கடந்து செல்லும் வாகனங்களிலிருந்து எழுப்பி வரும் அலைகள் தடைகளை தாண்டி கடல் அலைகளை நினைவுறுத்தின.எங்கோ மெளனத்தின் விளிம்புகளை மீட்டுவிட்ட குன்றுகளாய் தரைத்தட்டி நின்றன.

சிறகடிக்கும் குருவிகளின் சத்தம் மழையில் நனையும் காக்கைகள். மழை நீரில் நீந்திக் கழித்திடும் வாத்துக் கூட்டங்கள் ,மழையில் நனைய முடியாத வெயில், மழையில் நனைய மறுத்து குடைப்பிடித்தோடும் ஓடும் மனிதர்கள் என்று மனம் சிறகடித்துக்கொண்டு இருந்தது, எனோ தெரியவில்லை .மழையில் நனையும் மனிதர்கள் மட்டும் என் மனதில் நச்சென்று ஒட்டிக் கொண்டார்கள்.

வானம் மழைத்துளியில் இருந்து விடுப்பட்டிருந்தாலும் பூமியெங்கும் பனி துளியால் மூடப்பட்டிருந்தது. மழை பெய்து ஓய்ந்தபின் பேரமைதியை கிழித்துக் கொண்டு வாகனங்கள் ஓடிக்கொண்டிருந்தன. மெளனத்தின் பார்வைகள் சலனமற்று சிறு பிள்ளைபோல் வீதியில் உறங்கிக் கொண்டிருந்தன.

சிறு வயதில் ஏற்பட்ட மழைக் கலக்கம் பெரியவனாகி விட்ட பிறகும் அது மனக்கலக்கமாய் மாறி நின்றது. மழைக்காலங்களில் ஓடும் நீரோட்டத்தில் காகிதக் கப்பல்களை விட்ட காட்சிகள் ஓடி வந்து ஒட்டிக் கொள்கின்றன.

“ டேய் மழையிலே நனையதடா காச்சல் வந்திட போதுடா” என்று அம்மா கத்தும் கத்தல் இன்னும் என் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.
மழைக் காலங்களில் மழையில் நனைந்து காச்சல் வந்தது போல் நடித்து மறுநாள் பள்ளிக்கு மட்டம் போட நினைத்து மழையோடு ஒட்டிக் கொண்டு அண்ணனிடம் அடி வாங்கிய நினைவுகள் எல்லாம் எள்ளி நகையாடுகின்றன.

“ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......... ஜுரமாவது மன்னாங்கட்டியாவது. போடா ஸ்கூலுக்கு” என்று துரத்தும் அண்ணனும். வந்து வந்து தலையை அனைத்துபடி முகத்தில் கையை வைத்து தொட்டுப் பார்த்து காச்சல் அடிக்குதா கண்ணு என்று தாலாட்டும் தாயின் பாசமும் மழைக்காலத்தில் நிழற்படமாய் விரிந்துக் கொண்டிருந்தன

எங்கோ ஒரு மூளையில் மழையின் சிதறகளிலும் அதன் கதறல்களிலும் விழி பிதிங்கி நிற்கும் பூனைக் குட்டிகளின் ஈனக் குரல்கள் மழையின் நடுக்கத்தை உணர்த்தின.அப்படிதான் அன்றும் என் நண்பன் “சீச்சாக் போய்”(cicak Boy) பூனைக் குட்டியை புலிக்குட்டியாய் நினைத்து கொட்டும் மழையில் ஒதுங்கி நின்ற பூனைக் குட்டியை பிடித்து வந்து மழையிலே நனைத்து அது குளிரில் நடுங்குவதை கண்டு ஆனந்தத்தோடு விளையாடிக் கொண்டிருக்கும் போது அவனின் தந்தை முதுகிலே “நச்சுனு” நாலு போட்டு இழுத்துக் கொண்டு போனதை பார்த்து வயிறு குழுங்க சிரித்ததை இன்றும் மறக்க முடியுமா?

அந்தியில் மறையும் சூரியனைப் போல கோலத்தைப் போட்டு புள்ளியாக கலைந்து போனது மழை.. மாலை நேரத்தில் மெல்லிய சாரலாய் சேர்ந்து பொழியும் மழை நீர், எங்கோ சொட்டு சொட்டாய் இலைகளில் ஒழிகிக் கொண்டு இருக்கும் மீதி துன்பங்கள் எல்லாம் மழைத்துளிகளில் இருந்து குளமாய் நிறைந்திருந்த மெளனங்களின் ததும்பல்களாய் வழிந்தோடிக் கொண்டிருந்தன. ஜன்னலில் வழி உள்ளே புகுந்தோடும் குளிர்ந்த காற்று ஏதோ மலை உச்சியில் அவன் வாசம் இருப்பது போல் அவன் உடல் முழுவது மகுடி ஊதிக்கொண்டிருந்தன. என் நண்பர்கள் கூக்குரல் இட்டு மழையில் நனைந்துக் விளையாடிக் கொண்டிருதனர். அடைமழையில் நண்பர்களுடன் உதைப்பந்து விளையாடுவது என்பது ஒரு அலாதியான செயல் என்று எத்தனை மனிதர்கள் உணர்ந்து இருக்கின்றனர்? மழையில் உதைக்கும் பந்து மழை நீரிலே தடைப்பட்டு போக மறுக்கும் போது எழும் சந்தோசம் இருக்கிறதே அப்பப்பா......கோடி பொன் கொடுத்தாலும் தகுமா என்ன?

மழையில் நனையும் ஒவ்வொறு துளியும் என் குறுதியில் கலந்து என் உடலோடு குழைந்து நிற்கும் நினைவுகள் சுமந்த சோகக் கூட்டமாய் மழைக்காற்று என் வாசக்கதவுகளை நேசக் கரங்கொண்டு வாரி அனைத்துக் கொண்டு என் மழழை கால பிம்பங்களின் நினைவுகளை வருடிச் சென்றன.

.“டேய் பார்த்துடா மச்சான் ஆத்து வெள்ளம் வேகமா வருதுடா என்று சொல்லிக் கொண்டு போகும் பொழுதே அடித்துக் கொண்டு போன “காட்டு முனியாண்டி” எங்கோ போனானோ..... நனைந்திருந்த நிமிடங்கள் பாரமாய் நெஞ்சினிலே விம்மி நின்றன. மறு நாள் எதோ ஆற்றோர புதரிலே சொரிகிக் கொண்டு இருந்ததை மீட்டு வந்து போட்டார்கள் பிணமாய்.

துயரத்தின் மெளன மொழியே கண்ணீர் துளிதான் என்பார்கள்.கண்ணீர் முத்துக்கள் மனிதனின் மனத்துளிகளிருந்து வெளி வரும் இதய துடிப்புத்தானே.அதை எப்படி சொல்வது?

எங்கோ ஒரு நிழலில் ஒதுங்கிய அவனின் உயிரற்ற ஜடம் எங்களின் மனங்களிருந்து பதிப்பிக்கப்பட்ட பிம்மங்களாய் வெளியேற மறுக்கின்றன. அன்றிலிருந்து இன்று வரை மழைக்கால ஆற்று வெள்ளம் எங்களை விட்டு வடிய மறுக்கிறது.எதோ ஒரு சூனியமான பிரதேசத்தில் நின்று அவன் எங்களை ஒய்யாரமாய் அழைத்துக் கொண்டுதான் இருக்கின்றான்.
எதற்கு இப்போது காட்டு முனியாண்டியின் முகம் நினைவுக்கு வந்தது என்று தெரியவில்லை..ஆனால் நினைவுகளில் இருந்து விழுங்கிக் கொண்டு இருக்கும் வியர்வைகளால் என் முகம் பிசுபிசுத்துக் கொண்டு விகாரமாய் தெரிந்தது. காலக் கண்ணாடியின் முன் என் முகத்தை துடைப்பத்தற்கு கூட என் மனம் வரவில்லை.

கால வெள்ளத்தில் கண்களில் “காட்டு முனியாண்டி”யின் மிரட்சிப் பார்வை மட்டும் அகலாமல் என்னமாய் எங்களை பின் தொடர்கிறது. எதோ ஒரு ஒளி வட்டத்தில் மிதக்கும் ஆன்மாக்களாய் மழைக்காலம் முழுவதும் எங்களை ஆக்கிரமிப்பு செய்கிறது.
மழைக்கால பாம்புக்கு இரையாகும் சத்தமிடும் தவளையை போல மனிதர்கள் கால ஓட்டத்தின் அகோர பசிக்கு நமது எண்ணங்களும் மடிவதற்கு தயாராகி கொண்டிருக்கின்றன.

நம்மைப்போல.......விசித்திரம் நிறைந்த வாழ்க்கைப் பாதை இருள் காற்றிலே உடைந்து கிடக்கும் கதவுக்கு பின்னாலே நனைந்துக் கொண்டிருக்கும் மனத்தூறலிலே மனிதர்களின் எண்ணங்கள் மட்டும் பூமி யெங்கும் பூமாரி பொழிந்துக்கொண்டிருக்கிறது. இது மழைக்கால பதிவாகலாம் இல்லை கார்காலத்தில் தவழ்ந்து வந்த மழைக்காற்றாகக்கூட இருக்கலாம். இடி மின்னலில் கலந்து கறைந்து போன மரணங்களாகக்கூட இருக்கலாம்.

சிதைந்து போன மழைக்கால ஓலங்கள் மட்டும் நமது மனத்திரையில் விட்டு மறைந்து போவதில்லை. அவை மழைக் காலத்தில் மட்டும் மீண்டும் உயிர்த்தெழுந்து மறுபடியும் மரித்து போகின்றன.

Post a Comment