April 4, 2010

மனவளக் கலை சொல்லும் வாழ்க்கை நெறி


முக்கனி காயாக இருக்குங்கால் புளிக்கும் தன்மையுள்ள மா கனிந்ததும் இனிக்க வல்ல மதுர கனியாகிறது. நாம் வாழும் வாழ்க்கை நிலையும் அது தான். வாழ்க்கை என்னவென்று தெரியாத அனுபவம் அற்ற வாழும் வாழ்க்கை வேம்பாக கசக்கும் இவ்வாழ்க்கை போராட்டத்தில் சிக்கி சின்னபின்மாகி, போதுமடா சாமி என்ற மனம் நொந்த நிலைக்கு நம்மை இட்டுச்செல்லும் போது வாழ்க்கை அனுபவங்களை, தாம் கற்ற வாழ்க்கை கல்வியை நமக்கு படிப்பினையாக, பாடமாக தமிழ் இலக்கியமாக வகுத்து தந்த எத்தனையோ தமிழ்ச் சாண்றோர்களை நாம் மறக்கமுடியுமா?

மாந்தரின் வாழ்க்கை நெறிகளை வகுத்தும் தொகுத்தும் வாழும் வழிமுறைகளை சொல்லி சிற்பிப்போல் நம்மை செதுக்கிய அத்தகைய தமிழ் நெஞ்சங்களை வெறுக்கத்தான் முடியுமா? காயாக இருந்த வாழ்க்கை, கனிந்து இனிக்கும் மாங்கனி போன்று மாற்ற வல்ல அத்தகைய தமிழ்ப் பெருந்தகையைகளை எண்ணி எண்ணி வியக்கின்றோம். வியந்து வியந்து போற்றுகின்றோம்.

ஆழ்ந்த புலமை, சிறந்த சிந்தனை திறன். உலகத்தையே தன் இரண்டு அடியில் அளந்த வள்ளுவரின் வாக்கின் திறன் முன் இந்த அகில உலகமும் மண்டியிட்டு நிற்கிறது. செஞ்சொல் குறல் இன்பத்தில் தம் வாழ்க்கையின் இன்ப துன்பங்களை அனுபவ வெளியீடாக ஒவ்வொரு குறலும் முத்துக்களடங்கிய மாதுளங் கனியாக நமக்கு தருகின்றார். வள்ளுவர் தந்த வாழ்க்கை கல்வியியலை நமது தமிழர் வாழ்க்கையில் தடம் பதித்தோமா? அவர் தந்த தமிழ் கொடிகளை நமது வாழ்க்கை கூறுகளில் படரவிட்டோமா?

அற்புதங்களின் அணிவகுப்பு,அமுதத் தேன் பிலிற்றும் அறிவுத் தேனடை. “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்று முழக்கமிட்ட தவயோகி. திருமூலர் தரும் வாழ்க்கை நெறி. “படமாடக் கோவில் பகற்வதற்கு அது ஆமே” என்று ஏழைகளின் தொண்டில் இறைத் தொண்டு காணச் சொன்ன புரட்சி சித்தன் அவன்.

இயற்க்கையின் கொடுஞ் சக்திகளை கண்டு கலங்குகின்றோம்.வாழ்க்கையைக்கூட நொந்துக் கொள்கின்றோம்.ஆனால் எல்லா வல்ல இறையாற்றலை நினைத்து இறைவன் நமக்கு தந்த அருட்டாற்றலை கண்டு வியந்து போற்றுகின்றோம்..திருமூலர் சொல்லும் தமிழரின் வாழ்க்கை நெறி பாருங்கள் “ உயிர் இயங்கும் உடல் அனைத்து ஈசன் கோவில்” இவ்வுடலைக் கூட புனிதப்படுத்தும் நமது முன்னோர்களின் வாழ்க்கை வழி முறைகளை என்னவென்பது?
“அறிவே தெய்வம்” என்று சொன்னார் திருமூலர். இந்த இருபதாம் நூற்றாண்டிலும் அதையே மீண்டும் மீண்டும் வழியுறுத்திச் சொல்கின்றார் ஒரு வாழ்க்கைச் சித்தர். மனவளக் கலையை உலகெங்கும் பரப்பி மனித நேயத்தை வளர்த்து தமிழர்களின் தலைச் சிறந்த நன்முத்துக்களை வாழ்க்கை கூறுகளாக்கி மனவளத்தையும் நற்ப்பண்புகளை தனி மனித வாழ்வியலிலும் கட்டெலுங்கு மிக்க சமுதாயத்தையும் உருவாக்கிச் சென்றுள்ளார். வாழ்க வையகம் வாழ்க வளமுடன் என்று எல்லோரையும் வாழ்த்தியும் சென்றுள்ளார்.

இன்றைய நடைமுறைக் கல்வியை ஆரம்ப முதல் பல்கலைக் கழகம் வரைக்கும் பயிலும் நாம் வாழ்க்கை கல்வியை கற்க மறுகின்றோம் .இந்த வாழ்க்கையில் எற்படும் இன்ப துன்பங்களை எடைப் போடவும் சிக்கலியிருந்து மீண்டுவரவும் எந்த அனுபவ கல்வி நமக்கு துணை வரும்? மன வளத்தை சீர்செய்தோமானால் வாழ்க்கை நலமும் பேணப்படும்.

வந்த துன்பம் ஏற்றுச் சகித்து
அவற்றை போக்க
வழிகண்டு முறையோடு போக்கி
இன்பம் காத்து
எந்த துன்பம் வரினும் எதிர்
நோக்கி நிற்பாயேல்:
இன்பமே மிகுதி படும்.
துன்பங்கள் தோல்வியுறும்.
-வேதாத்திரி மகரிஷி
இவர் தரும் வாழ்க்கை கல்வி ஆரம்ப முதல் உயர் நிலைப்பாடங்களை கொண்டது. விஞ்ஞானத்தில் மெஞ்ஞானமா? எதையும் விஞ்ஞானபூவர்மாக விளக்கம் தந்த மெய்ஞானி. இவ் வாழ்க்கை உடல் நலம் சிறந்து மன நலம் இல்லை என்றால் எப்படி இருக்கும்? இல்லை மன நலம் இருந்து உடல் நலம் இல்லை என்றால் எப்படி இருக்கும்? உடல் பயற்சியோடு ஆரம்பிக்கும் வாழ்க்கை கல்வி, தியானம், தவம், மன வளம் என்று தொடர்கிறது. உடல் உறுதிக் கொண்டால் தவமும் தியானமும் கைக்கூடும்.மனமும் திடப்படும்.

இவர் சொல்லும் வாழ்க்கை நெறி தியான முறைகளில் சிறந்த எளிய முறை குண்டலினி யோகம், உடல் உறுப்புக்களை வருத்தாத உடற்பயிற்சி,தளராத தற்சோதனை, உயிர்ச்சக்தியைப் பாதுகாப்பதன் மூலம் வயோதிகத்தைத் தள்ளிப்போடும் சித்தர் நெறியான காயகல்ப யோகம் இவை நான்கும் ஒருங்கினைந்த பழந்த்தமிழர் வாழ்க்கை முறையைப் தொகுத்தும் அவர் தந்த உளப்பயிற்சிகள் தமிழர்கள் மற்றும் அல்லாமல் உலகமும் உய்யவும் அவர் தரும் சமாதான பார்வை போற்றத்தக்கது.மகரிஷி அவர்கள் வெளியிட்டுள்ள எந்த ஒரு கருத்தும் பகுத்தரிவிற்கோ,விஞ்ஞானத்திற்கோ புறம்பானதன்று என்பது குறிப்பிடத்தக்கது.


உள்ளத்திலும் உயிரிலும் ஊறிய தமிழ்ச்சுவையை நினைவில் தேக்கிவைத்து வாழ்வியலின் இன்பத்திலே ஊற்றி வைத்தால், பார்புகழும் தமிழ் மணம் சிறந்தோங்கும், ஐம்புலன்களையும் ஒன்றித்து உற்று நோக்கி பீடு நடையோடும் அகமும் புறமும் நன்றாய் இனைந்து செல்லும் தமிழர் வாழ்வியலின் சிறப்பை அகிலம் போற்றும். தமிழர் நலம் பேன அவர்களின் மனம் சிறக்க வேதாத்திரி மகரிஷி போற்றும் மனவளக் கலையைக் கற்று மாண்புடன் வாழ்வோம்.
Post a Comment