September 17, 2009

எனக்கு அகவை 20 இருக்கும்


அப்பொழுது எனக்கு அகவை 20 இருக்கும்.வாலிபம் கொஞ்சம் வயது பருவம்.அரும்பு மீசையுடன் வலம் வந்துக்கொண்டிருக்கும் கம்பத்து சேவல் நான். கோழியில் இருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என்பது போல் இந்த .வாழ்க்கையும் புரியாத புதிராய் பெரும் கோட்டையை கட்டுவது போன்று என்னை மிரட்டிக்கொண்டிருக்கும்.. உன்மையில் வாழ்க்கை புரிதல் என்பது அந்த காலத்தில் தோட்டப்புரத்தில் கட்டியிருக்கும் வெள்ளை சினிமா திரைப்போன்றதே. படம் ஒடாத வரைக்கும் வெள்ளை திரையில் ஒன்றுமே இல்லாத ஒரு சுவர்ச் சித்திரமாய் பல்லை இளித்துக்கொண்டிருக்கும். நமது வாழ்க்கை பாதையிலும் செடி கொடி மரங்கள் முளைக்காத பச்சை பசலெனும் புள்வெளி தரைதான் அந்த இளமை காலம்.. கவலைகள் என்றால் என்ன என்று கேட்கும் காலம் அது. விடலைப்பரும் என்பது எந்த கவலையும் இல்லாமல் ஒடித்திரிந்த உல்லாச வாழ்க்கையின் இறுதிக்கட்டம் என்பதும் என்னை போன்ற இளசுகளுக்கு எங்கே தெரியும்? கால ஒட்டதில் முட்புதர்களும் பெரும் பெரும் வினை மரங்களும் நமது வாழ்க்கை பாதையில் நமது பயணங்களுக்கு பெரும் தடையாய் அமைகின்றன..
சோம்பித்திரிந்த அந்த காலக்கட்டதிலே எதோ மதமதப்பில் மிதந்து திரிந்தது போன்று உணர்வு.வேலையா வெட்டியா? உண்டு உறங்கி களித்து திரிந்த காலம். படித்து முடித்து ஒரு நல்ல வேலையில் சேர்ந்து இன்பமயமான வாழ்க்கை தேடி மற்றவர்கள் போன்று நாமும் ஓடி ஒடி தேடிக் கொண்ட வாழ்க்கை தான் இப்பொழுது நாம் வாழும் இந்த வாழ்க்கை. கனவுகளில் கழித்து கற்பனையில் திளைத்து கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று இருமார்ப்பாய் வாழ்ந்த நேரம்,

நாற்ச்சந்தியில் அமைந்துள்ள சாலை ஒரத்து நண்பரின் புத்தகக் கடையில் போடும் அரட்டை தனங்களுக்கு குறைவே இல்லை। அது அனைத்து நண்பர்களும் ஒன்று கூடும் ஒரு கேளிக்கை மையம் போன்றது. ஆனந்தத்திற்க்கும் அரட்டைக்கும் இடை இடையே பக்கத்தில் இருக்கும் தமிழர் உணவகத்திலும் பசி ஆத்தலும் உண்டு. என் நண்பர்களில் சிலர். அப்பொழுத்து தான் ஆசிரியர் தொழிலுக்கு அடி எடுத்து வைத்திருந்தனர்.அவர்கள் செய்யும் வெடைப்புக்கு பஞ்சமே இல்லை. என் நண்பர் ஞாண மூர்த்தி என்ற இலச்சுமணன். ஒரு நட மாடும் புகைப்படக் கலைஞர் அந்த காலத்திலே புகைப்படங்களை மிகவும் அருமையாக எடுபார். இப்பொழுதும் அதைதான் செய்துக்கொண்டிருகிறார்.அருமையான மனிதர்.அவர் செய்யும் சேட்டைகளுக்கு அப்பாப்பா சொல்லி மாளாது.தாமசான பேர்வழி, ஆனால் சமுதாய சேவை என்றால் முதல் மனிதராக இருப்பார். முரட்டு தனமும் அங்கு பளிச்சிடும். அவரும் நானும் போட்டிப் போட்டிக்கொண்டு சித்திரங்களை வரைவதில் முனைப்புகாட்டுவோம். வரைந்த சித்திரங்கள் காலா ஓட்டத்தில் மழைத்துளியாய் மறைந்து போயின. ஒரு சிலவற்றை தவிர. எங்களின் சேவை மையங்களாக பாரதி தமிழ்ப் பள்ளியும் பெர்ணம் தோட்டத்து மாரியம்மன் கோவிலின் தேவார வகுப்பும் தான்.

இன்று நினைத்து பார்க்கிறேன்।காலங்கள் எவ்வளவு சீக்கரத்தில் நகர்து விடுகிறது.நத்தையாய் நகர்ந்தாலும்.நமக்கும் ஒரு பிரம்மிப்பு.எதோ நேற்றுதான் நடந்தது போன்று வியப்பு அதே வேளையில் ஒரு சோகமும் இளையோடிக் கிடக்கும். எனோ இளைமையை தொலைத்தது போன்றும் ஒர் உணர்வு, ஒவ்வொரு மனிதனுக்கும் இளமைகாலம் எவ்வளவு எழில் நிறைந்த பொற்காலமாகும். கரைந்து போன காலங்கங்களை எண்ணி எண்ணி ஏக்கம் தான் மிகும். இப்படி இருந்திருக்கலாமே.இல்லை அப்படி இருந்திருக்கலாமே என்று. இன்னும் நன்றாக படிப்பிலே அக்கரை செலுத்தியிருக்கலாமே.அந்த தொழில் கல்வியை கற்று இருந்தால் வாழ்க்கை இன்னும் சிறப்படைந்திருக்குமோ? என்று என் கற்பனை கணக்கு போடும். சிறு வயதில் நமக்கு வாழ்க்கை பாடங்களை யார் தான் சொல்லித்ததறுவது? உன் வழி இதுதான் என்று சொல்லி தருபவர்கள் மிக குறைவு. சொல்லித்தந்தாலும் நாம் ஏற்றுக்கொள்கின்ற மனநிலையிலா நாம் இருக்கின்றோம்? இளைய பருவத்தில் பள்ளிப்பாடங்களை சிரத்தையுடன் பயிலும் நாம் வாழ்க்கை பாடங்களை கற்றுக்கொள்வதில் கோட்டை விட்டு விடுகின்றோம்.பிறகு தும்பையை விட்டு வாலை பிடித்த கதையாகி விடுகிறது.ஏன் தான் சிறு வயதில் நமக்கு அறிவு புலப்பட மாட்டேன் என்கிறதோ? நாம் வாழ்ந்த சுழ்நிலையே அல்லது வளர்ந்த சுழலோ? இல்லை அறிவு முதிர்ச்சி நிலை குறைவோ? வாழ்க்கை அடித்தளம் அல்லது நாம் தொடங்க போகும் வாழ்க்கை நிலையின் தொடக்கமே கண் தெரிய காட்டில் விட்டால் எப்படி இருக்கும்? முதல் கோனல் முற்றும் கோனல் என்பது போன்று பெரும்பான்மை இன்றய இளையோர் வாழ்க்கை திக்கு தெரிய காட்டில் கைவிட்டது போன்று தான் அல்லல்படுகின்றனர். அவர்களுக்கு வல்லமை தருவது யாரோ?

யான் இருந்ததோ சிப்பாங் அம்பாட் ஊத்தான் மெலிந்தாங் என்ற கிராமமும் சிறு பட்டிணமும் இனைந்த சிற்றூர்। அந்த சிற்றுருக்கு பக்கத்திலே அழகிய பெர்ணம் ஆறு ஒய்யாரமாய் ஒடிக்கொண்டிருக்கும் அந்த சிற்றுரை போன்றே அமைதி நிறைந்த வாழ்வு அங்கு உள்ள மக்களுக்கு. காலையில் வேலைக்கு சென்று மத்தியம் வேலை முடிந்து வந்தவுடன் நேரே கோப்பிக்கடையில் அரட்டை அடிப்பது அங்குள்ளவர்களின் பொழுது போக்கு.ஒரு தேனீர் கோப்பையில் ஒரு நாள் பூராவும் மல்யுத்ததை பார்த்து களித்து திரிவது,அவர்களுக்கு ஆனந்தம். வாழ்க்கையை உணர்ந்து உள்ள பூர்வமாக வாழும் அவர்களின் வாழ்வியலின் பாங்கு அழகு மிக்கதோர் இனிய இன்பமான வாழ்வுதான். எதற்க்கும் கவலை படாத அவர்களின் வாழ்க்கையை பார்த்தால் நமக்கே போறாமை தான் மிஞ்சும். நல்லது கெட்டது இன்பத் துன்பங்களில் பங்கெடுத்து ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து ஒரு அமைதியான வாழ்க்கை வாழ்கின்றனர்.அது தான் கம்பத்து வாழ்கையோ,ஆனால் கோலாலம்பூர் போன்ற பெரிய பரப்பரபான மக்கள் தொகைக் கொண்ட மாநகரத்தில் உறங்குவதும் தெரியவில்லை விழிப்பதும் தெரியவில்லை.ஒரு நண்பரை பார்பதற்க்கு கூட நேரத்தையும் காலத்தையும் ஒதுக்கித்தான் வரவேண்டியிருக்கிறது. ஒரு இறப்புக்கு கூட நேரத்தையும் காலத்தையும் பார்த்துதான் போகவேண்டி யிருக்கிறது,அப்படி இயந்திர கதியில் சிக்கிக்கொண்டதோ நமது மனித வாழ்க்கை? வாழ்க்கை மட்டுமா? மனமும் கூடதானே?.

அன்புடன் கி।மனோக்கரன்Post a Comment